மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக டிசம்பர் மாதம் இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டது. பிசிசிஐ-ன் இந்த அறிவிப்பை கிரிக்கெட் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
முன்னாள் கேப்டன் பிஷன்சிங் பேடி வரவேற்றுள்ளார். பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட அனுமதி அளித்த பிசிசிஐக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவசேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கேப்டன் என்ற முறையில் கருத்து தெரிவிக்க கவாஸ்கருக்கு உரிமை உள்ளது என்று பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். சிவசேனா கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, ‘பிசிசிஐ இந்த முடிவை எடுத்தபோது எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி உடனிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்வாக நிறைய பிரச்சினைகளை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண்பதில் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இரு நாட்டு அரசியல் சூழ்நிலை ஸ்திரமற்றதாக இருக்கும் நிலையிலும், கிரிக்கெட் வாரியங்கள் மனப்பூர்வமாக இணைந்து செயல்படுகின்றன’ என்றார்.
பாகிஸ்தான் அணி வருகைக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்பு பற்றி கேட்டதற்கு, பாகிஸ்தானில் பாதுகாப்பு திருப்தி அளிக்கும் பட்சத்தில் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி அங்கு செல்லும், என்று சுக்லா தெரிவித்தார்.
பிசிசிஐ-ன் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ், இதன்மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவு வலுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தான் மக்களும் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலக கிரிக்கெட் அரங்கில் வலுவான அணியாக திகழும் இந்திய அணியுடன் விளையாடுவதால் பாகிஸ்தான் வீரர்களும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் ஜாகீர் அப்பாஸ்.
0 comments:
Post a Comment