கடைசி ஓவரில் இந்தியா வெற்றி - இலங்கை ஏமாற்றம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய கவுதம் காம்பிர் சதம் அடித்து கைகொடுத்தார்.

சொந்த மண்ணில் பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தோல்வி அடைந்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி, நேற்று கொழும்புவில் நடந்தது. "டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணியில் உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா நீக்கப்பட்டு டிண்டா, "போதை' ராகுல் சர்மா இடம் பெற்றனர். இலங்கை அணியில் திரிமான்னேவுக்குப் பதில் ஜீவன் மெண்டிசிற்கு வாய்ப்பு கிடைத்தது.


அசத்தல் துவக்கம்:

இலங்கை அணிக்கு வழக்கம் போல தரங்கா, தில்ஷன் துவக்கம் கொடுத்தனர். இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சை துவக்கிய "சீனியர்' ஜாகிர் கான் மிரட்டினார். முதலில் அபாயகரமான தில்ஷனை (4) போல்டாக்கினார். சில நிமிடத்தில் தரங்காவையும் (8), இவர் திருப்பி அனுப்பினார். மறு முனையில் அசத்திய இர்பான் பதான் வேகத்தில் சண்டிமால், "டக்' அவுட்டானார்.


"சூப்பர்' ஜோடி:

பின் இந்திய பவுலர்கள் ஏனோ, தானோ என்று சொதப்ப துவங்கினர். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி அணியை, சரிவில் இருந்து மீட்டது. இர்பான் ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்த இருவரும், பின் நிதானத்துக்கு மாறினர். இதனால், ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.

போகப் போக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயவர்தனா, சர்வதேச அரங்கில் 48வது அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிரான 17வது அரைசதம் இது. இந்த ஜோடியை பிரிக்க தோனி எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கடந்த போட்டியில் சதம் அடித்த சங்ககரா, நேற்றும் பேட்டிங்கில் கைகொடுத்தார். இவர், தனது 73வது அரைசதம் அடித்தார்.

ஒரு வழியாக நான்காவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் சர்மா சுழலில் ஜெயவர்தனா (65) சிக்கினார். சிறிது நேரத்தில் சங்ககராவும் 73 ரன்னில் அவுட்டானார்.


மாத்யூஸ் அசத்தல்:

இதன் பின் மாத்யூஸ், ஜீவன் மெண்டிஸ் இணைந்தனர். இவர்கள் இந்திய அணியின் பவுலிங்கை ஒரு "கை' பார்த்தனர். இர்பான், அஷ்வின் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய மெண்டிஸ், டிண்டா பந்தில் சிக்சர் அடித்தார். இவரது பந்தில் தன்பங்கிற்கு சிக்சர் அடித்த மாத்யூஸ், தனது 11வது அரைசதம் கடந்தார்.

இவர்களது அதிரடியில், கடைசி 10 ஓவர்களில், இலங்கை அணி 97 ரன்கள் சேர்த்தது. 50 ஓவர் முடிவில் இலங்கை அணி, 5 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது. மாத்யூஸ் (71), மெண்டிஸ் (45) அவுட்டாகாமல் இருந்தனர்.


காம்பிர் அபாரம்:

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக் (3) அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த விராத் கோஹ்லி (38), கேப்டன் தோனி (31) நிலைக்கவில்லை. மறுமுனையில் பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் காம்பிர், ஒருநாள் அரங்கில் தனது 11வது சதம் அடித்தார். இவர் 102 ரன்கள் எடுத்திருந்த போது "ரன்-அவுட்' ஆனார். வழக்கம் போல ரோகித் சர்மா (0) ஏமாற்றினார்.


ரெய்னா அரைசதம்:

பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான் ஜோடி இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. மலிங்கா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரெய்னா, ஒருநள் அரங்கில் தனது 23வது அரைசதம் அடித்தார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது முதலிரண்டு பந்தில் ரெய்னா மூன்று ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தை இர்பான் கோட்டைவிட பரபரப்பு ஏற்பட்டது. நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இர்பான் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்து, இலங்கை மண்ணில் சாதனை வெற்றி பெற்றது. ரெய்னா (65), இர்பான் (34) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி ஜூலை 31ல் கொழும்புவில் நடக்கிறது.

0 comments:

Post a Comment