கேப்டன் தோனி, சேவக் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தோனியின் கேப்டன் திறமையால் மட்டும் உலக கோப்பை கிடைக்கவில்லை என வெளிப்படையாகவே சாடியுள்ளார் சேவக்.
இந்திய அணியின் கேப்டன் தோனி மற்றும் சேவக் இடையே நல்லுறவு இல்லை. சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் போது சேவக் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் மந்தமாக "பீல்டிங்' செய்வதாக தோனி விமர்சித்தார்.
இதற்கு சேவக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒருகட்டத்தில் சேவக்கிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
அணியில் பிளவு:
தற்போது மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள சேவக், உலக கோப்பை வெல்ல தோனியின் தலைமை மட்டுமே காரணம் அல்ல என கூறி புதிய பிரச்னை கிளப்பியுள்ளார்.
கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் தோனி வகுத்த சிறந்த வியூகங்களே சாம்பியன் பட்டம் வெல்ல வழிவகுத்தது. இதே போல 2011ல் நடந்த இலங்கைக்கு எதிரான உலக கோப்பை(50 ஓவர்) பைனலில் சேவக் "டக்' அவுட்டானார்.
ஆனால், தோனி 91 ரன்கள் விளாசி ஆட்ட நாயகனாக ஜொலித்ததோடு, சாம்பியன் கனவையும் நனவாக்கினார். இந்நிலையில் தோனியை வீணாக வம்புக்கு இழுத்துள்ள சேவக் அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவக் கூறியது:
2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை, 2011ல் 50 ஓவர் உலக கோப்பையை தோனி தலைமையில் வென்றது இந்திய அணி. இதற்கு காரணம் தோனிக்கு வலுவான அணி கிடைத்திருந்தது. எப்போது தரமான அணி கிடைக்கிறதோ, அப்போது வெற்றி பெறுவது எளிதாகி விடும்.
ஆஸ்திரேலிய அணி கூட இப்படித்தான், ஒரு நேரத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இந்திய அணி உலக கோப்பை வென்றதற்கு காரணம், திறமையான வீரர்கள் அணியில் இருந்தது தான் காரணம். இதனால் தான் தோனியால் சாதிக்க முடிந்தது.
சச்சின் ஏமாற்றம்:
வரும் இலங்கை தொடரில் சச்சின் இல்லாதது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏமாற்றம் தான். அதேநேரம், அவருக்கு 39 வயதாகி விட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர் எந்த தொடரில் விளையாட விரும்புகிறாரோ, அதில் அனுமதிக்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கட்டாயம் இடம் பெறுவார்.
உடற்தகுதி பிரச்னையல்ல:
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலும் விளையாடினேன். இந்நிலையில், உடற் தகுதி என்பது ஒரு பிரச்னையே அல்ல. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர், வரும் "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு சரியான பயிற்சியாக அமையும்.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய "ஏ' அணியில் சிலர் நன்றாக செயல்பட்டனர். சிலர் ஏமாற்றினர். இத்தொடரில் செய்த தவறுகளில் இருந்து இளம் வீரர்கள் சரியான பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் சரிசெய்து, அடுத்து வரும் உள்ளூர் தொடர்களில் வலிமையான முறையில் மீண்டுவர முயற்சித்தால் நல்லது. '
இவ்வாறு சேவக் கூறினார்.
0 comments:
Post a Comment