சர்ச்சையால் என்ன பயன் - சானியா மிர்சா புலம்பல்

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு டென்னிஸ் வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தினால், யாருக்கும் எந்த பலனும் இல்லை. தவிர, மகேஷ் பூபதியுடனான நட்பு தான் பாதிக்கப்படுகிறது,'' என, சானியா மிர்சா புலம்பியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் வீரர்கள் தேர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் பயஸ்-விஷ்ணு வர்தன், பூபதி-போபண்ணா ஜோடி ஆண்கள் இரட்டையர் பங்கேற்பர் என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்தது. தவிர, கலப்பு இரட்டையரில் பயசுடன் தான் சானியா மிர்சா விளையாட வேண்டும் என, அறிவித்தது.

இதுகுறித்து சானியா மிர்சா கூறியது:

வீரர்கள் தேர்வில் ஏற்பட்ட பிரச்னையால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. இதனால் எங்களுக்கு இடையே மோதல் உருவானது தான் மிச்சம். இது துரதிருஷ்டவசமானது.

ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி, என்றாலும் இதை மறப்பது என்பது மிகவும் கடினம். ஏனெனில், இந்த விவகாரமே வந்திருக்கக் கூடாது.


யாருடனும் விளையாடுவேன்:

நானும், பூபதியும் நல்ல நண்பர்கள். நான் முன்களத்தில் விளையாடுபவள். பூபதி பின்களத்தில் விளையாடுபவர். எங்கள் ஜோடிக்கு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். இப்போதைய பிரச்னையால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிட்டது.

அதேநேரம், இவருடன் தான் விளையாடுவேன், இவருடன் விளையாட முடியாது என, ஒருபோதும் நான் கூறியதில்லை. நாட்டுக்காக யாருடனும் விளையாடுவேன்.


பெருமையாக உள்ளது:

தற்போது பயசுடன் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. போட்டியின் மீது கவனம் செலுத்தி, பதக்கம் வெல்ல முயற்சிப்பது தான் முதல் இலக்கு. விம்பிள்டனில் பயஸ் கலப்பு இரட்டையரில் பைனலுக்கு முன்னேறியது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

நானும், பூபதியும் முதலில் தோற்று வெளியேறியது ஏமாற்றம் தான். நாங்கள் பைனலுக்கு சென்றிருக்க வேண்டும். காமன்வெல்த், ஆசிய போட்டி, ஆசிய-ஆப்ரோ என, மொத்தம் 12 பதக்கங்கள் வென்றுள்ளேன்.

ஒலிம்பிக் பதக்கம் மட்டும் தான் வெல்ல வேண்டும். இம்முறை இதை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.

0 comments:

Post a Comment