கண்ணில் பெயில்ஸ் தாக்கிய பரிதாபம்

பயிற்சி போட்டியில் பறந்து வந்த "பெயில்ஸ்' தென் ஆப்ரிக்க வீரர் மார்க் பவுச்சரின் இடது கண்ணில் பலமாக தாக்கியது. ரத்தம் கொட்டிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மூன்று மணி நேரம் "ஆப்பரேஷன்' நடந்தது.

பார்வைக்கு பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிகுந்த சோகத்துடன் ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன், உள்ளூர் அணியான சாமர்சட் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.


துரத்திய துரதிருஷ்டம்:

டான்டன் நகரில் நடந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் வீசிய பந்தில், சாமர்சட் அணியின் ஜிமால் ஹுசைன் "கிளீன்' போல்டானார். அப்போது பறந்து வந்த "பெயில்ஸ்', துரதிருஷ்டவசமாக கீப்பராக செயல்பட்ட பவுச்சரின் இடது கண்ணின் வெள்ளைப் பகுதியில் பலமாக தாக்கியது.

மைதானத்தில் சுருண்டு விழுந்த இவரது கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது. . பின் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவருக்கு, மூன்று மணி நேரம் "ஆப்பரேஷன்' நடந்தது. பார்வைக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பவுச்சரின் வாழ்க்கையில் பணம், புகழ் என அனைத்தையும் கொடுத்தது கிரிக்கெட் தான். இன்றைக்கு அதே கிரிக்கெட் அனைத்தையும் பறித்துக் கொள்ள, நேற்று திடீரென ஓய்வை அறிவித்தார்.


சாதனை வீரர்:

கடந்த 1997ல் முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த பவுச்சர் மிகச் சிறந்த கீப்பர், பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். இக்கட்டான நேரத்தில் அணியை பல முறை கரை சேர்த்துள்ளார். 147 டெஸ்ட் (532 கேட்ச், 23 ஸ்டெம்பிங்), 295 ஒருநாள் (403 கேட்ச், 22 ஸ்டெம்பிங்) மற்றும் 25 சர்வதேச "டுவென்டி-20' (18 கேட்ச், ஒரு ஸ்டெம்பிங்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம், தனது 150வது டெஸ்டில் விளையாடும் கனவுடன் வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பை இழந்தார். இவர், சர்வதேச போட்டிகளில் 999 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கினார். இதில் டெஸ்டில் மட்டும் 555 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.

இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கிய முதலாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார். தவிர இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

ஓய்வு குறித்து பவுச்சர் கூறியது: கண்ணில் ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய நீண்ட நாட்கள் தேவைப்படும். இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளதால், ஓய்வு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மிகுந்த வருத்தத்துடனும், மன வேதனையுடனும் வெளியிடுகிறேன்.

கடந்த 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் எனது வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்ணில் காயம் ஏற்பட்டவுடன், முகம் தெரியாத நிறைய நண்பர்கள் உதவி செய்ய முன்வந்து ஆறுதல் தந்தனர். அவர்களது ஆசிர்வாதம், விரைவில் குணமடைய உதவும் என நம்புகிறேன்.
இவ்வாறு மார்க் பவுச்சர் கூறினார்.


ஸ்மித் வருத்தம்

பவுச்சரின் ஓய்வு முடிவு குறித்து தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் வருத்தத்துடன் கூறுகையில், ""பவுச்சருக்கு ஏற்பட்ட காயம், ஓய்வு முடிவு தென் ஆப்ரிக்க அணிக்கு துரதிர்ஷ்டவசமான ஒன்று. இவரது இடத்தை பூர்த்தி செய்வது கடினம். கடந்த 15 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு 100 சதவீத உழைப்பை அளித்துள்ளார்.

அணியின் வெற்றிக்காக போராடும் குணமுடைய இவர், இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். இவர், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறோம். இவரது எதிர்கால வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்,'' என்றார்.


பதம் பார்த்த பந்து

கிரிக்கெட்டில் பந்து தாக்கியதில் சிலர் மரணமடைந்துள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த ராமன் லாம்பாவும் ஒருவர். வங்கதேச தலைநகர் தாகாவில் 1998ல் நடந்த உள்ளூர் போட்டியில், லாம்பா "பார்வார்ட் ஷார்ட் லெக்' திசையில் "பீல்டிங்' செய்தார். அப்போது மெஹராப் ஹொசைன் அடித்த பந்து இவரது நெற்றியில் பலமாக தாக்கியது. சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

* கடந்த 2000ல் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியின் போது அனில் கும்ளே வீசிய பந்து, இந்திய விக்கெட் கீப்பர் சபா கரீம் வலது கண்ணில் தாக்கியது. பார்வை இழப்பு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

* கராச்சியில் 1959ல் நடந்த உள்ளூர் போட்டியில், பாகிஸ்தானின் அப்துல் அஜிஸ், தில்த்வார் அவான் பந்தை எதிர்கொண்டார். பந்து மார்பு பகுதியில் தாக்கியதால், அஜிஸ் மரணமடைந்தார்.

* கடந்த 1993ல் உள்ளூர் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர் இயான் போலேவின் கண் பகுதிக்கு கீழே பந்து தாக்கியதால், சுருண்டு விழுந்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட இவருக்கு, மயக்கமருந்து கொடுக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

0 comments:

Post a Comment