எழுச்சி பெறுமா இந்தியா - இன்று இலங்கையுடன் 3வது மோதல்

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இன்று எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கினாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்று நம்பிக்கை தந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்தது.

இன்று, இரு அணிகள் மோதும் மூன்றாவது ஆட்டம், கொழும்புவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது.

இந்திய அணி கேப்டன் தோனி, பெரும்பாலும் அணியில் பெரிய மாற்றத்தை விரும்ப மாட்டார். தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும் அணிதான், கடைசிவரை நீடிக்கும். அதேநேரம், ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா, முதல் இரு போட்டியில் 1, 0 என, ஏமாற்றினார்.

கடைசியாக ரோகித் சர்மா விளையாடிய 10 போட்டிகளில், 156 ரன்கள் தான் எடுத்துள்ளார். இருந்தும், இவருக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு தந்து ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்.
தனது கடைசி போட்டியில் (2011, டிச.,) சதம் அடித்த மனோஜ் திவாரி நிலை தான் பரிதாபமாக உள்ளது. அணியில் இடம்பெற்று, உடற்தகுதி இருந்தும், தொடர்ந்து 14 போட்டிகளில் களத்துக்கு வெளியே தான் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

துவக்கத்தில் சேவக், காம்பிர் அடுத்து விராத் கோஹ்லி, ரெய்னா தங்கள் இடத்தை உறுதி செய்து விடுவதால், ரகானேவும் இடமில்லாமல் தடுமாறுகிறார். "மிடில் ஆர்டருக்கும்' இவர் ஒத்து வரமாட்டார் என்பதால், இன்றும் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதி.


ஓஜா சிக்கல்:

பிரேமதாசா மைதானம் வழக்கமாக சுழற் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், பிரக்யான் ஓஜா காயம் அடைந்தது, இந்திய அணியின் பவுலிங்கில் பின்னடைவு தான். இதனால், அஷ்வினுடன், "போதை' ராகுல் சர்மா களமிறங்குவாரா இல்லையா என்பது உறுதியில்லாமல் உள்ளது.

ஏனெனில், இவர் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளதால், போட்டியில் களமிறங்க பி.சி.சி.ஐ., , அனுமதிக்குமா என்று தெரியவில்லை. இதனால், வேகத்தில் "சீனியர்' ஜாகிர் கான், உமேஷ் யாதவ், "ஆல்-ரவுண்டர்' இடத்தில் இர்பான் பதான் கைகொடுக்க வேண்டும்.


பேட்டிங் பலம்:

இலங்கை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் வலுவாகத்தான் உள்ளது. சதம் அடித்த சங்ககரா, தில்ஷன், தரங்கா இன்றும் அசத்தலை தொடரலாம். பவுலிங், பேட்டிங்கில் ஜொலிக்கும் "ஆல்-ரவுண்டர்' பெரேரா இந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளார்.

இவருடன் மாத்யூஸ், சண்டிமால், திரிமான்னேவும் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்கின்றனர்.


மலிங்கா ஆறுதல்:

முதல் போட்டியில ஏமாற்றிய மலிங்கா, அடுத்து வழக்கமான தனது விக்கெட் வேட்டைக்கு திரும்பியது, கேப்டன் ஜெயவர்தனாவுக்கு ஆறுதல் தான். இளம் <இசுரு உதனா, சுழலில் ரங்கனா ஹெராத், ஜீவன் மெண்டிஸ், சேனநாயகேவும் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

0 comments:

Post a Comment