ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம்: சானியா

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் எத்தனை பதக்கம் வெல்வோம் என்று உறுதியளிக்க முடியாது. அதேநேரத்தில் 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது: இத்தனை பதக்கங்கள் வெல்வோம் என்று முன்கூட்டியே தெரிவிப்பது சரியானதாக இருக்காது. நாங்கள் அனைவருமே கடும் நெருக்கடிக்கு மத்தியில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறோம்.

அதனால் பதக்கம் வெல்வோம் என்று உறுதிகூற முடியாவிட்டாலும், 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

சானியாவுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கனிடம் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு குறித்து கேட்டபோது, "இந்தியாவுக்கு எத்தனை பதக்கம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணிப்பது பொருத்தமானதாக இருக்காது.

இந்த விஷயத்தில் முன்கூட்டியே கருத்து சொல்வது சரியாக இருக்காது என்பதால் நான் இப்போதைக்கு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை.

இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள் அதிகளவில் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வது கட்டுப்படுத்தப்படுமா என்று மாக்கனிடம் கேட்டபோது, "அடுத்த ஒலிம்பிக்கின்போது விளையாட்டுத் துறை அமைச்சர்கூட முன்னாள் வீரராகவே இருப்பார் என்று நம்புகிறேன்.

இந்த முறை லண்டன் செல்லும் 10 பேர் அடங்கிய குழுவில் நான் மட்டும்தான் விளையாட்டு வீரர் அல்ல' என்றார்.

0 comments:

Post a Comment