உலக கோப்பை "டுவென்டி-20' உத்தேச அணியில் யுவராஜ்

உலக கோப்பை "டுவென்டி-20' தொடருக்கான, உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், "கேன்சரில்' இருந்து மீண்ட யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளனர்.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர், வரும் செப்., 18 முதல் அக்., 12 வரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான 30 பேர் கொண்ட, உத்தேச இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


பதான் சகோதரர்கள்:

கேப்டன் தோனி, சேவக், ரெய்னா, காம்பிர், ரோகித் சர்மா <உள்ளிட்ட வழக்கமான வீரர்களுடன், இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள், ரவிந்திர ஜடேஜா, அஷ்வினும் இடம் பெற்றனர். நுரையீரல் "கேன்சர்' கட்டி பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்ட யுவராஜ், கடந்த இரு மாதங்களாக "பேட்டிங்' பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரும் உத்தேச அணியில் இடம் பெற்றார். இவர், 15 பேர் கொண்ட பிரதான அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.


மன்தீப்புக்கு இடம்:

கடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மன்தீப் சிங் புதுமுகமாக வாய்ப்பு பெற்றுள்ளார். கடந்த சீசனில் 432 ரன்கள் குவித்த இவர், இதுவரை 13 முதல் தர போட்டிகளில் 1074 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 63.


ராயுடுவுக்கு வாய்ப்பு:

அதேபோல, கபில்தேவின் ஐ.சி.எல்., அமைப்பில் இருந்து விலகிய மும்பை வீரர் அம்பதி ராயுடுவுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் இவர் மும்பை அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் (15 போட்டி, 333 ரன்கள்) முதலிடம் பெற்றார். சமீபகாலமாக அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


உத்தேச அணி விவரம்:

தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, அஷ்வின், பிரக்யான் ஓஜா, உமேஷ் யாதவ், அசோக் டிண்டா, ரகானே, மனோஜ் திவாரி, ராகுல் சர்மா, வினய் குமார், ஜாகிர் கான், யுவராஜ் சிங், உத்தப்பா, இர்பான் பதான், யூசுப் பதான், மன்தீப் சிங், பியுஸ் சாவ்லா, ரவிந்திர ஜடேஜா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், முனாப் படேல், நமன் ஓஜா, தினேஷ் கார்த்திக், பிரவீண் குமார், பாலாஜி.


பட்டின்சனுக்கு "நோ'

உலக கோப்பை "டுவென்டி-20' தொடருக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியில், வேகப்பந்து வீச்சாளர் பட்டின்சன் இடம் பெறவில்லை.

நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் பட்டின்சன், சுழற் பந்து வீச்சாளர் நாதன் லையான் புறக்கணிக்கப்பட்டனர். மற்றபடி, கிளின்ட் மெக்கே, மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹில்பெனாஸ் ஆகியோருடன், மிட்சல் ஜான்சன், நானஸ், ஹாரிஸ் ஆகிய அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.


உத்தேச அணி விவரம்:

ஜார்ஜ் பெய்லி, டிராவிஸ் பெர்ட், கிறிஸ்டியன், கம்மின்ஸ், தோகர்டி, பால்க்னர், ஆரோவ் பின்ச், ரேயான் ஹாரிஸ், ஹில்பெனாஸ், பிராட் ஹாக், டேவிட் ஹசி, மைக்கேல் ஹசி, மிட்சல் ஜான்சன், மிட்சல் மார்ஷ், லாப்லின், ஷான் மார்ஷ், மாக்ஸ்வெல், மெக்டொனால்டு, மெக்கே, நானஸ், ஓ கீபே, பெய்னே, குயினே, ஸ்டீவன் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், ஆடம் வோஜஸ், மாத்யூ வேட், வார்னர், வாட்சன், காமிரான் ஒயிட்.

இதிலிருந்து 15 பேர் கொண்ட அணி, வரும் ஆக., 18ல் அறிவிக்கப்படும்.


பீட்டர்சன் நீக்கம்

உலக கோப்பை "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் பீட்டர்சனின் கனவு தகர்ந்தது.

இங்கிலாந்தின் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன்,32. சமீபத்தில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விதிப்படி ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றால், "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்க முடியாது. இதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட "டுவென்டி-20' <உலக கோப்பைக்கான இங்கிலாந்து உத்தேச அணியில் பீட்டர்சன் பெயர் இடம் பெறவில்லை. கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment