மீண்டும் சேவக், ஜாகிர் கான் - இந்திய அணி இன்று தேர்வு

இலங்கைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில், சேவக், ஜாகிர் கான் மீண்டும் இடம் பெற உள்ளனர்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்குப் பின் இந்திய வீரர்களுக்கு சுமார் 2 மாத ஓய்வு கிடைத்தது. தற்போது, ஐந்து ஒரு நாள், ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் (ஜூலை 21 முதல் ஆக., 7 வரை) இந்திய அணி, இலங்கை செல்கிறது.

இதற்கான அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய தேர்வுக்குழு இன்று மும்பையில் தேர்வு செய்கிறது.


சேவக் வருகை:

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேவக், ஜாகிர் கான், உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டனர். தவிர, தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒரு "டுவென்டி-20' போட்டியிலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை.

ஆனால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற இருவரும் தங்கள் உடற்தகுதியை நிரூபித்தனர். இந்த வீரர்கள் இலங்கைத் தொடரில் இடம் பெறுவர் என்று தெரிகிறது.சேவக் வருவதால் ஆசிய கோப்பை அணியில் இருந்த மனோஜ் திவாரியின் இடம் கேள்விக்குறிதான்.


சச்சின் சந்தேகம்:

கடந்த உலக கோப்பை (2011) தொடரை அடுத்து, சச்சின் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவே ஆர்வம் காட்டினார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றார். வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் தனது சர்வதேச 100 வது சதத்தை பதிவு செய்தார்.

தற்போது முக்கியத்துவம் இல்லாத, இலங்கை ஒருநாள் தொடருக்கு, சச்சின் முக்கியத்துவம் கொடுப்பாரா என்பது சந்தேகமே. ஒருவேளை சச்சின் இல்லையென்றால், சேவக், காம்பிருடன் மூன்றாவது துவக்க வீரராக அஜிகின்யா ரகானேவுக்கு வாய்ப்புச் செல்லும். கேப்டன் தோனி, ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் வழக்கமாக இடம் பெறுவர்.


இர்பான் உறுதி:

வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் ஜாகிர் கான், உமேஷ் யாதவ் வருவதால், பிரவீண் குமார், வினய் குமார், அசோக் டிண்டா ஆகிய மூவரில் இருவர் தான் இலங்கை செல்ல முடியும். "ஆல் ரவுண்டர்' இடத்தை இர்பான் பதான் தட்டிச் செல்லலாம்.


ஹர்பஜன் வருவாரா:

இலங்கை ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இதனால், தமிழகத்தின் அஷ்வின் தனது இடத்தை தக்க வைப்பார். இவருடன் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் மீண்டும் அணிக்கு திரும்புவார் என நம்பப்படுகிறது. இது சரியாக நடந்தால், ராகுல் சர்மாவுக்கு இடம் கிடைக்காது.

ஐ.பி.எல்., தொடரில் பெரும் ஏமாற்றத்தை தந்த ரவிந்திர ஜடேஜா, யூசுப் பதான் ஆகியோருக்கு வாய்ப்புக் கிடைப்பது கடினம் தான்.


பொறுத்திருந்து பார்க்கலாம்

தோள் பட்டை காயத்தில் இருந்து மீண்டுள்ள சேவக் கூறுகையில்,"" தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற் தகுதி தேர்வில் பங்கேற்றேன். இதற்கான அறிக்கையை "பிசியோதெரபிஸ்ட்' தேர்வுக்குழுவிடம் தருவார். அடுத்து என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம்,'' என்றார்.


இவர்களும் வருவார்களா

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய "ஏ' அணியில் மத்திய பிரதேசத்தின் சாக்சேனா, 25, சுழற்பந்து வீசுவதுடன், பின் வரிசை பேட்டிங்கிலும் அசத்தினார். மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் நம்பிக்கை தந்தார். இவர்கள் இந்திய அணியில் புதுமுகமாக இடம் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை.

0 comments:

Post a Comment