விலகினார் சச்சின், ஜடேஜாவுக்கு கல்தா - இந்திய அணி அறிவிப்பு

இலங்கைத் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சச்சின் விலகினார். தொடர்ந்து சொதப்பிய ரவிந்திர ஜடேஜா ஒருவழியாக நீக்கப்பட்டார். சேவக், ஜாகிர் கான் மீண்டும் இடம் பெற்றனர்.

இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து ஒரு நாள், ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் (ஜூலை 21 முதல் ஆக., 7 வரை) பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் 21ம் தேதி அம்பாந்தோட்டையில் நடக்கிறது.

இதற்கான 15 பேர் கொண்ட அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய தேர்வுக்குழு, நேற்று மும்பையில் தேர்வு செய்தது. இதில் கேப்டன் தோனி பங்கேற்கவில்லை.


சச்சின் ஓய்வு:

ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்ட சச்சினுக்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் இல்லை. இலங்கைத் தொடரில் இருந்து தாமாகவே விலகிக் கொண்டார். இவருக்கு பதில் ரகானே வாய்ப்பு பெற்றார். கேப்டனாக தோனி, துணைக் கேப்டனாக விராத் கோஹ்லி தொடர்கின்றனர்.


சேவக் "ஓ.கே':

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத சேவக், சமீபத்தில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபித்தார். இதையடுத்து, இவருக்கு அணியில் இடம் கிடைத்தது.


பிரவீண் "அவுட்':

வேகப்பந்து வீச்சாளர்களில் "சீனியர்' ஜாகிர் கான் அணிக்கு திரும்பியதால், "பார்ம்' இல்லாமல் தவித்து வரும் பிரவீண் குமார் நீக்கப்பட்டார். சுழற் பந்து வீச்சு பிரிவில் தமிழகத்தில் அஷ்வினுடன், ராகுல் சர்மா, பிரக்யான் ஓஜாவும் இடம் பெற்றனர். இர்பான், யூசுப் பதான் சகோதரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.


ஜடேஜா இல்லை:

தோனியின் தயவில் அணியில் ஒட்டிக் கொண்டிருந்த ரவிந்திர ஜடேஜா, ஒரு வழியாக நீக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சக்சேனா, புவனேஷ்வர் போன்ற இளம் வீரர்கள் யாருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.


அணி விவரம்:

தோனி (கேப்டன்), விராத் கோஹ்லி (துணைக் கேப்டன்), சேவக், காம்பிர், ரகானே, ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ஜாகிர் கான், உமேஷ் யாதவ், வினய் குமார், அசோக் டிண்டா, அஷ்வின், ராகுல் சர்மா மற்றும் பிரக்யான் ஓஜா.


ஹர்பஜன் அவ்வளவு தானா

கடந்த 2011ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இருந்து, வயிற்றுப்பகுதியில் காயம் என்ற பிரச்னையால், பாதியில் நாடு திரும்பினார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். பின் இந்தியாவில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியா சென்ற அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார். ஆசிய கோப்பை தொடரிலும் இடம் பெறாத இவர், ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், பவுலிங்கில் எதிர்பார்த்த அளவு சாதிக்கவில்லை. இலங்கை தொடரில் எப்படியும் இடம் பெறுவார் என நம்பப்பட்டது. தற்போது மீண்டும் சேர்க்காததால், ஹர்பஜனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது போலத் தெரிகிறது.


யுவராஜ் வாய்ப்பு எப்படி

தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது:

அணித் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளட்சருடன் தொலைபேசியில் விவாதித்தோம். கடந்த தொடர்கள் பற்றி ஆராய்ந்தோம். இதன் அடிப்படையில் தான் அணித் தேர்வு நடந்தது. யுவராஜ் சிங் பயிற்சியை துவக்கியது நல்ல விஷயம். ஏற்கனவே உலக கோப்பை போட்டிகளில் அசத்திய இவர், "டுவென்டி-20' உலக கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment