அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, "ஆல் ரவுண்டர்' திறமை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும்,'' என, இந்தியாவின் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதித்தவர். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகினார் சச்சின்.
தற்போது ஓய்வில் உள்ள சச்சின் கூறியது.
ஒருவர் டெஸ்ட் வீரராக உருவாக வேண்டும் என்றால், அது இயற்கையிலே அமைய வேண்டும். இதற்கென்று எந்த "பார்முலாவும்' கிடையாது. மற்றபடி, ஒரு சிலர் விரும்பாத நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என, யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஒருவேளை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால், அதற்கான வழியை அவர்களே கண்டு கொள்ள வேண்டும். தங்கள் கனவு நிறைவேற, எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, "ஆல் ரவுண்டர்' திறமை வெளிப்படுத்தினால் தான் முடியும். எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். அதேநேரத்தில், பேட்டிங்கில் 20 விக்கெட்டுகளையும் பயன்படுத்தக் கூடாது. இதைத்தவிர, சிறப்பான பீல்டிங்கும் அவசியம்.
டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடத்தை பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்புகின்றனர். இது ஒன்றும் வெகுதொலைவில் இல்லை. படிப்படியாக இதை அடையலாம். ஆனால், இதற்கு சில உறுதியான முடிவுகள் தேவைப்படுகின்றன.
முதலில் நியூசிலாந்து தொடர் உள்ளது. அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் வரும் தொடரில், இப்போதே கவனம் செலுத்தினால், அப்புறம் கவனம் சிதறிவிடும்.
வீரர்களுடன் இணைந்து விளையாடும் போது, ஒவ்வொருவரது இயற்கை குணங்கள், திறமைகள், பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி செயல்படுவர் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான், சிறப்பான "பார்ட்னர்ஷிப்' அமைக்க முடியும்.
இப்படித்தான் டிராவிட், கங்குலியுடன் வெற்றிகரமாக செயல்பட்டேன். ஒவ்வொரு தலைமுறை வீரர்களும் இதைப் பின்பற்றினால் நல்லது.
சிறுவயதில் இருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் நான் இருந்தேன். ஒவ்வொரு முறை பயிற்சிக்காக களமிறங்கும் போதும், பயிற்சியாளர்கள் என்ன விரும்புகின்றனரோ, அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்.
இதற்காக மிகவும் கடினமான பயிற்சியில ஈடுபடுவேன். ஏனெனில் எனக்கு வேண்டியது எல்லாம், இந்திய அணியில் இடம். இதை அடைய வேண்டும் என்பதே பெரிய இலக்காக இருந்தது.
இப்போதும், தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை சிறப்பாக விளையாட வேண்டும். ஏனெனில், இந்த கிரிக்கெட்டினால் தான் வளர்ந்தேன். இதைத் தொடரவே விரும்புகிறேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
0 comments:
Post a Comment