சச்சின் சாதனையை முறியடிக்க முடியுமா?

கிரிக்கெட்டில் சாதனைகள் முறியடிக்கப்படுவது சகஜம். சச்சின் சாதனையையும் யாராவது ஒருவர் தகர்ப்பார். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்,''என, கபில்தேவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில் சர்வதேச அளவில் 100 சதம் அடித்து சாதித்தார். இதனை முறியடிப்பது மிகவும் கடினம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறியது:

கவாஸ்கர் 34வது டெஸ்ட் சதம் அடித்த போது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இவரைவிட சிறந்த பேட்ஸ்மேன் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பு இல்லை என அப்போது நினைத்தோம்.

இவரது சத சாதனையை யாருமே எட்ட முடியாது என நம்பினோம். ஆனால், எங்களது கணிப்புகள் பொய்யாகின. கவாஸ்கரை காட்டிலும் சிறந்த வீரர்கள் உருவாகினர். இது, கிரிக்கெட் என்பது தனிப்பட்ட வீரரை காட்டிலும் மிகவும் பெரியது என்பதை உணர்த்தியது.

ஒரு கட்டத்தில் கவாஸ்கர் சாதனையை சச்சின் முறியடித்தார். ஆக, சாதனைகள் என்பது, முறியடிப்பதற்கு தான். சச்சினும் மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதனை யாருமே முறியடிக்கவில்லை என்றால், அது மனித இனத்துக்கே பின்னடைவாக அமைந்து விடும். சச்சின் சாதனையை யாராவது ஒருவர் தகர்ப்பார். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.

வாழ்க்கையில் ஒருவர் வெற்றிபெற ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் முக்கியம். நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தப் போகும் நேரத்தில், இருவர் பிரபலமடைந்தனர். ஒருவர் சச்சின். மற்றொருவர் வினோத் காம்ப்ளி. இவர்களை இந்திய அணியின் மிகச் சிறந்த வீரர்கள் என "மீடியா' புகழ்ந்தது.


காம்ப்ளி வீழ்ச்சி:

இதில், காம்ப்ளியிடம் ஒழுக்கம் இல்லை. எந்த பாதையில் சென்று சாதிக்கப் போகிறோம் என்ற திட்டமும் இல்லாததால், வீழ்ச்சியை சந்தித்தார். சில நேரங்களில் உங்களிடம் திறமை இருக்கலாம். ஆனால், உங்களைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளவில்லை என்றால், சச்சினை போல சாதனை நாயகனாக உருவெடுக்க முடியாது. உங்களுக்கு என்று ஒரு "ரோல் மாடல்' இருக்க வேண்டும். அவரை மட்டுமே எல்லையாக வைத்துக் கொள்ளக்கூடாது. அவரையும் தாண்டி சாதிக்க வேண்டும்.
பெற்றோர் முக்கியம்:
குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். குழந்தைகளை நன்கு புரிந்து, அவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும். எனது மகள் தான் எனக்கு சிறந்த நண்பர். தொழில்நுட்ப ரீதியான விஷயங்களில் என்னைவிட புத்திசாலியாக உள்ளார். அவரது கருத்துக்கு உரிய மதிப்பு அளிக்கிறேன்.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

0 comments:

Post a Comment