தோனி வெற்றிகரமான கேப்டன் - சேவக் அந்தர் பல்டி

செய்தியை பரபரப்பாக்க, நான் கூறியதை திரித்து வெளியிட்டு விட்டனர். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் தோனி,'' என, சேவக் திடீரென "பல்டி' அடித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் தோனி மற்றும் சேவக் இடையே சமீபகாலமாக நல்லுறவு இல்லை. இதனிடையே, "" உலக கோப்பை வெல்ல தோனியின் தலைமை மட்டுமே காரணம் அல்ல, இவருக்கு வலுவான அணி கிடைத்திருந்தது.

எப்போது தரமான அணி கிடைக்கிறதோ, அப்போது வெற்றி பெறுவது எளிதாகி விடும். இந்திய அணி உலக கோப்பை வென்றதற்கு காரணம், திறமையான வீரர்கள் அணியில் இருந்தது தான்,'' என, தோனியை வம்புக்கு இழுத்திருந்தார் சேவக்.

விரைவில், இலங்கை தொடர் துவங்கவுள்ள நிலையில், சேவக்கின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. வீரர்கள் இடையே மீண்டும் பிளவு ஏற்பட்டதை, இது, வெளிப்படையாக காட்டியது.

தற்போது இந்த செய்தியை மறுத்துள்ளார் சேவக். தான் கூறியதை"மீடியா' திரித்து வெளியிட்டு விட்டதாக, "பல்டி' அடித்துள்ளார். இதுகுறித்து சேவக், தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:

செய்தியில் பரபரப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, "மீடியா' எனது கருத்தை திரித்து வெளியிட்டது துரதிருஷ்டவசமானது. நான் என்ன சொன்னேன் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். "நாங்கள் சிறந்த அணி.

அதனால் தான் தோனியின் தலைமையில் இரண்டு உலக கோப்பை வெல்ல முடிந்தது<,' இதுதான் நான் கூறியதன் சுருக்கம்.

தவிர, தோனி சிறந்த கேப்டன். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் இவரும் ஒருவர். எனது அறிக்கை இதைத் தவிர, வேறெதையும் உணர்த்துவதாக இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
இவ்வாறு சேவக் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment