இலங்கை பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்டில் துவக்கம்

இந்தியாவில் கடந்த 2008-ல் துவக்கப்பட்ட 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் பிரபலமானதை அடுத்து ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டில் இதே போன்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் துவங்கியுள்ளன.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இதுபோன்ற போட்டிகளை நடத்திவரும் நிலையில் தற்போது இலங்கையும் இதன் வரிசையில் சேர்ந்துள்ளது.

இலங்கை பிரீமியர் லீக் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 20 ஓவர் போட்டித் தொடர் வரும் ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி கோலாகலமாக இலங்கையில் துவங்க உள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்டு 31-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் இலங்கையின் உள்ளூர் அணிகளான வயம்பா, கண்டுரட்டா உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் விளையாட இருக்கும் இலங்கை அணி வீரர்களின் ஏலம் வரும் ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்கள் இருக்கலாம். அதில் 6 பேர் வெளிநாட்டை சேர்ந்த வீரர்களாக இருக்கலாம். விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் உள்ளூர் வீரர்கள் 9 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 2 பேரும் இடம் பெறலாம். இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றும் பல்லேகலே ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஏழு அணிகளையும் இந்தியாவை சேர்ந்த கார்ப்பரேட் மற்றும் விளையாட்டுத்துறை நிறுவனங்களே வாங்கியிருக்கின்றன என்பதுதான்.

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியிருப்பதுதான்.

0 comments:

Post a Comment