கேப்டன் பதவியை துறந்தது பாதிப்பா? மனம் திறக்கிறார் சேவக்


டில்லி அணியின் கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படாது,'' என, சேவக் தெரிவித்தார். 

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. கடந்த ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியின் கேப்டனாக இருந்த இவர், அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். புதிய கேப்டனாக இலங்கையின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டார். 

இது குறித்த சேவக் கூறியது: 

கேப்டனாக இருக்கிறோமா, இல்லையா என நான் எண்ணிப்பார்ப்பதில்லை. தவிர, இந்தப்பதவியால், எந்தவொரு நெருக்கடியையும் உணர்ந்ததில்லை. என் பேட்டிங்கும் பாதிப்படையவில்லை. 

அப்படி கேப்டன் பதவியால் எனக்கு, அதிக நெருக்கடி இருந்திருந்தால், கடந்த ஐ.பி.எல்., தொடரில், என்னால் எப்படி ஐந்து அரை சதங்களை அடித்திருக்க முடியும். தவிர, கடந்த தொடரில், டில்லி அணி சார்பில் (495) அதிக ரன்கள் எடுத்தேன். 


சரியான வாய்ப்பு

இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சிறப்பான வீரர். இவர் தொடரிலிருந்து விலகியதன் மூலம், இவரின் பங்களிப்பை இழக்கிறோம். இருப்பினும், இவரது இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவர். தவிர, தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அணியின் வெற்றிக்கு உதவலாம். 

உதாரணமாக, கடந்த தொடரின் பைனலில், பிஸ்லாவின் அதிரடி ஆட்டத்தால், கோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைப்போல, இம்முறை டில்லி அணிக்காக யாராவது வெற்றி தேடித் தருவார்கள் என நம்புகிறேன். 

ஒவ்வொரு அணியும், சமமான திறமைகளை கொண்டுள்ளது. ஆனால், வெற்றி பெறுவது என்பது, குறிப்பிட்ட நாளில், அந்த அணியின் செயல்பாட்டை பொறுத்தே உள்ளது. 

நமது நாட்டில், விளையாட்டில் திறமையானவர்கள் அதிகம் உள்ளனர். இதனை, இவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். 

இவ்வாறு சேவக் கூறினார். 

0 comments:

Post a Comment