கேப்டன் தோனி, அஷ்வின், ஜடேஜா, முரளி விஜய் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, "மினி' இந்திய அணியாக காட்சி அளிக்கிறது.
சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 4-0 என வென்றது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது கேப்டன் தோனி, முரளி விஜய், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா அடங்கிய நால்வர் கூட்டணி தான்.
இத்தொடரில் இந்திய அணி கைப்பற்றிய 79 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில், 53 ஐ, அஷ்வின்-ஜடேஜா ஜோடி தான் பெற்றது. இதில் அஷ்வின் மட்டும் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடர் நாயகன் விருதை வென்றார். ஜடேஜா 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
முரளி அபாரம்:
பேட்டிங்கில் அதிக ரன்கள் (2 சதம் உட்பட 430) எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளவர் முரளி விஜய். சென்னை டெஸ்டில் 224 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய தொடரில் ஆதிக்கத்தை துவங்கி வைத்தவர் இந்திய அணி கேப்டன் தோனி (326 ரன்கள்). இந்த நால்வரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளனர்.
முதுகெலும்பு ரெய்னா:
அடுத்து, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிக்கான இந்திய அணியின் முதுகெலும்பாக இருப்பவர் ரெய்னா. கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடித்தரும் இவர், சென்னை அணியில் தான் உள்ளார்.
உள்ளூர் போட்டிகளின் "ரன் மெஷின்' என்றழைக்கப்படும் பத்ரிநாத்தும், இங்கு தான் உள்ளார். இவர், சென்னை அணியின் "மிடில் ஆர்டரை' பலப்படுத்துவார். விக்கெட் கீப்பராக விரிதிமன் சகாவும் கூடுதலாக இணைந்துள்ளார்.
"பாபா' சக்தி:
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல உதவியவர் பாபா அபராஜித். இந்திய அணியின் சிறந்த "ஆல்-ரவுண்டராக' வளர்ந்து வரும் இவர், தமிழகத்துக்காக ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்ற அனுபவத்துடன், ஆறாவது தொடரில் அசத்த காத்திருக்கிறார்.
மொத்தத்தில், சென்னை அணியின் 11 வீரர்களில், 8 பேர் இந்திய அணியின் வீரர்களாக உள்ளனர். இதனையடுத்து, மஞ்சள் நிற உடையணிந்த இந்திய அணியாக மாறி உள்ளது.
0 comments:
Post a Comment