ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில், புவனேஷ்வர் வேகத்தில் அசத்த, துவக்க வீரர்களை இழந்த ஆஸ்திரேலிய அணி திணறுகிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.
மூன்றாவது போட்டி பஞ்சாப்பில் உள்ள மொகாலியில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 283 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, இன்றைய போட்டியில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அறிமுக வீரர் தவான், 187 ரன்கள் எடுத்தபோது லியான் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் கோவனிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் தவான் தவறவிட்டார். அடுத்து வந்த புஜாரா (1) அம்பயரின் தவறான முடிவால் வந்த வேகத்தில் "பெவிலியன்' திரும்பினார்.
மறுமுனையில் லியான் பந்தில் பவுண்டரி அடித்த தமிழக வீரர் முரளி விஜய், டெஸ்ட் அரங்கில் 3வது சதத்தை பதிவு செய்தார். இவர் 153 ரன்கள் எடுத்த போது ஸ்டார்க் வேகத்தில் சிக்கினார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் (37) நிலைக்கவில்லை. பின் வந்த கேப்டன் தோனி (4) விரைவாக பெவிலியன் திரும்பினார். ஜடேஜா (8) ஏமாற்றினார். அடுத்து வந்த அஷ்வின் (4) ஏமாற்றினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் நம்பிக்கையுடன் போராடிய விராத் கோஹ்லி அரைசதம் கடந்தார். பின் வந்த புவனேஷ்வர் குமார் (18) நிலைக்கவில்லை. இஷாந்த் சர்மா டக்-அவுட்டானார். ஓஜாவும் (1) சிடில் பந்தில் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 499 ரன்கள் எடுத்தது. கோஹ்லி (67) அவுட்டாகாமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு சிடில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
பின் 91 ரன்கள் பின்தாங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, புவனேஷ்வர் வேகத்தில் அதிர்ந்தது. இவர் முதலில் வார்னரை (2) வெளியேற்றினார். அடுத்து கோவனை (8) அவுட்டாக்கினார்.
பின் வந்த ஸ்மித்தை (3) போல்டாக்கினார். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தது.
0 comments:
Post a Comment