ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து மைக்கேல் கிளார்க் விலகல்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் 31 வயதான மைக்கேல் கிளார்க், இந்திய தொடரின் போது காயமடைந்தார். 

முதுகின் கீழ் பகுதியில் வலியால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் நடந்த கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. கிளார்க்குக்கு 17 வயதில் இருந்தே அடிக்கடி இந்த பாதிப்பு இருந்து வருகிறது. 

சிட்னியில் அவருக்கு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், புதிதாக எந்த காயமும் ஏற்படவில்லை, ஏற்கனவே உள்ள காயம் அதிகமாகி இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர் தசைப்பிடிப்பாலும் அவதிப்பட்டு வருகிறார். 

இந்த காயத்தில் இருந்து அவர் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப 7 முதல் 10 வாரங்கள் ஆகும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முழு உடல்தகுதியுடன் அவர் தயாராகுவதற்கு ஏற்ப தேவையான சிகிச்சை, பயிற்சி முறைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால் அடுத்த வாரம் தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் புனே வாரியர்ஸ் அணிக்காக ரூ.2.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். மேலும் புனே வீரர் யுவராஜ்சிங் கேப்டன் பொறுப்பை ஏற்க தயங்குவதால், கிளார்க்கை கேப்டனாக்க முயற்சி நடந்தது. 

அணியை வழிநடத்துவதற்காக அவருக்கு ரூ.11 கோடி அளிக்க அந்த அணி நிர்வாகம் முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவரது விலகலால் புனே அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சீசனில் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தார். 

அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அனேகமாக யுவராஜ்சிங் அல்லது ராஸ் டெய்லர் ஆகியோரில் ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது.  

0 comments:

Post a Comment