சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என, மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் வரும் ஏப்., 3ம் தேதி துவங்குகிறது. இதில், இலங்கை அணியில் இருந்து 13 வீரர்கள், பஞ்சாப் தவிர மற்ற 8 அணிகளில் பங்கேற்கின்றனர்.
கடைசிக் கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என தமிழக அரசு தெரிவித்தது.
இதை ஏற்றுக்கொண்ட ஐ.பி.எல்., நிர்வாகம், மாற்று வழியை தேடியது. கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அனைத்து போட்டிகளையும் நடத்தலாம் என அணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதற்கு ஐ.பி.எல்., நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
கடைசியில், சென்னையில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டர் என உறுதி தெரிவித்தது. இத்துடன் பிரச்னை முடிந்தது என்ற நிலையில், மேலும் பல திருப்பங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது.
உரிமையாளர்கள் எதிர்ப்பு:
அதாவது,"சென்னைக்கு எதிரான போட்டிகளில் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கினால், அது அந்த அணிக்கு சாதகமாகி விடும்,' என, அணி உரிமையாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதில், இலங்கை வீரர்கள் யாரும் இல்லாத பஞ்சாப் அணியும் சேர்ந்து கொண்டு எதிர்ப்பது தான் வினோதமாக உள்ளது.
ஒருவேளை சமாதானம் ஆகாத பட்சத்தில் சென்னையில் நடக்கவுள்ள போட்டிளை கேரளாவின் கொச்சிக்கு மாற்ற முடிவு, பி.சி.சி.ஐ., செய்துள்ளதாக தெரிகிறது. தவிர, விசாகப்பட்டின மைதானத்தையும் தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுள்ளனர்.
"பிளே-ஆப்' மாற்றம்:
இத்தனை எதிர்ப்பையும் மீறி 8 லீக் போட்டிகள் நடந்தாலும், மே 21, 22ல் நடக்கவுள்ள "பிளே ஆப்' போட்டிகள் கட்டாயம் சென்னையில் நடக்காது என்று தெரிகிறது. ஏனெனில், பைனலுக்கான தகுதிப் போட்டி என்ற நிலையில், முன்னணி வீரர்களை சேர்த்தாக வேண்டிய நிலை இருப்பதால், எந்தநேரத்தில் இடம் மாற்றம் செய்யப்படலாம். இந்த போட்டிகளில் பெரும்பாலும் விசாகப்பட்டினத்தில் நடக்கும் எனத் தெரிகிறது.
மாத்யூஸ் கேப்டன்
தமிழக மண்ணில் இலங்கைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ஆனால், இங்குள்ள டில்லி, ஐதராபாத் ஐ.பி.எல்., அணிகளின் கேப்டனாக இலங்கை அணியின் ஜெயவர்தனா, சங்ககரா தான் உள்ளனர்.
இந்நிலையில் புனே அணியின் கேப்டன் கிளார்க், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து, இலங்கையின் மாத்யூஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment