இலங்கை பிரச்னை காரணமாக தமிழகத்தில் பதட்டம் நிலவுவதாக தெரிவித்து, ஐ.பி.எல்., போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட, இலங்கையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. அரசு எதிர்ப்பு காரணமாக, சென்னை வந்த இலங்கை கால்பந்து வீரர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கை வீரர்கள் பங்கேற்பர் என்பதால், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த முடியாது என, தமிழக அரசு அறிவித்தது.
இதனால், வரும் ஏப்., 3ல் துவங்கவுள்ள ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடருக்கு சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. ஏனெனில், பஞ்சாப் தவிர, மற்ற 8 அணிகளில் இலங்கை அணியின் 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னை அணியில் குலசேகரா, தனஞ்செயா உள்ளனர்.
இவர்கள் சென்னை மண்ணில் களமிறங்கினால் கடும் எதிர்ப்பு ஏற்படும். எனவே, சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்களை சேர்க்க வேண்டாம் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவுறுத்தியாக செய்திகள் வெளியாகின.
ஆனால், சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகளையே நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் விவரம்:
கடந்த 2010ல் ஆந்திராவின் தெலுங்கானா போராட்டம் நடந்த போது, டெக்கான் அணியின் போட்டிகள் ஐதராபாத்தில் இருந்து மாற்றப்பட்டன. இதுபோல இப்போதும் நடக்க வேண்டும்.
அணியாக விளையாடி வரும் நிலையில், திடீரென சென்னைக்கு வரும் போது மட்டும், வீரர்களை மாற்றினால் அணியின் வெற்றியை பாதிக்கும். டில்லி, ஐதராபாத் அணிகளின் கேப்டன்களாக உள்ள ஜெயவர்தனா, சங்ககராவை வெளியில் உட்கார வைக்க முடியுமா. மும்பை அணி மலிங்கா இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.
தவிர, அஞ்சத்தக்க சென்னை அணியை, சொந்த மண்ணில் குழப்பத்துடன் சந்திப்பது பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து சென்னை அணி நிர்வாகம் கருத்து தெரிவிக்கவில்லை. தவிர, சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், இந்திய அணி கேப்டன் தோனி தான், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்.
இப்படி, ஐ.பி.எல்., தொடரின் தலைமையகமாக சென்னை உள்ள நிலையில், இந்த கோரிக்கை ஏற்கப்படுமா எனத்தெரியவில்லை. இதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" தமிழகத்தின் சூழ்நிலை நன்கு தெரியும்.
விரைவில் இதுகுறித்து முடிவெடுப்போம். மற்றபடி, சென்னையில் இருந்து போட்டிகளை மாற்றும் எண்ணமெல்லாம் கிடையாது. இந்த செய்திகள் அடிப்படையற்றவை,'' என்றார்.
0 comments:
Post a Comment