சச்சினுக்கு மட்டும் சலுகையா?


டெஸ்ட் போட்டிகளில் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காத சச்சினுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் நீடித்து வரும் இவர், சதத்தில் சதம் அடித்து வரலாறு படைத்தவர். 

கடந்த ஆண்டு திடீரென ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் சச்சின், சமீபகாலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். 

கடந்த 2011, ஜனவரியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த பின், இதுவரை பங்கேற்ற 21 டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

கடைசியாக களமிறங்கிய 10 இன்னிங்சில் (76, 5, 2, 81, 13, 7, 37, 21, 32, 1) இரு முறை மட்டும் அரைசதம் கடந்தார். இவர் இன்னும் அணியில் நீடிக்க அனுமதித்துள்ளனர்.

அதேநேரம், கடைசி 10 இன்னிங்சில் (117, 25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு சதம் அடித்த சேவக்கை, அணியில் இருந்து நீக்கினர். இவ்விஷயத்தில் சேவக்கிற்கு ஒரு நியாயம், சச்சினுக்கு ஒரு நியாயம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் கூறியது:

இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகச் சிறந்த வீரர் சச்சின். மற்ற வீரர்களில் இருந்து வித்தியாசமானவர். இவரது திறமை குறித்து ஒவ்வொரு தொடருக்கு ஒருமுறையும் ஆராய்ந்து கொண்டிருப்பது சரியல்ல. 

சச்சின் ஓய்வு குறித்து யாரும் விவாதிக்க கூடாது. இது அவரது சொந்த விஷயம். இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அவரைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்பதும் அழகல்ல. ஏனெனில், நான் அணி தேர்வாளர் இல்லை.

இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

0 comments:

Post a Comment