வரலாறு படைத்தது இந்தியா


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் 3-0 என வென்றது. 

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக தொடர்ந்து மூன்று டெஸ்டில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408, இந்தியா 499 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஹியுஸ் (53), லியான் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, முதலில் லியான் (18 ) ஓஜாவிடம் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் கிளார்க் ஓஜா பந்தில், இரண்டு பவுண்டரி அடித்தார். இவர் 18 ரன்கள் எடுத்த போது, இத்தொடரில் ஐந்தாவது முறையாக ஜடேஜா பந்தில் அவுட்டானார். 

எதிர்முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹியுஸ் (69) அஷ்வின் "சுழலில்' சிக்கினார். ஹென்ரிக்ஸ் (2) ஜடேஜாவின் "சூப்பர் கேட்ச்' மூலம் வெளியேறினார். சிடில் (13) நிலைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாடின் (30) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 

ஸ்டார்க் (35) ஜடேஜாவிடம் சரணடைய, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 223 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. இதையடுத்து இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் தவானுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், முரளி விஜய் உடன் புஜாரா துவக்க வீரராக களமிறங்கினார். முரளி விஜய் (26) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. புஜாரா (24) லியான் "சுழலில்' சிக்கினார். கோஹ்லி (34) ஓரளவு கைகொடுத்தார்.  

சச்சின் (21) ரன் அவுட்டானார்.  கடைசி நேரத்தில் ஜடேஜா, தோனி அதிரடியில் மிரட்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  தோனி (18), ஜடேஜா (8) அவுட்டாகாமல் இருந்தனர். 

0 comments:

Post a Comment