ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு, வறட்சி நிவாரணமாக, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். நிதி கொடுக்காத அணிகளை, மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
சிவசேனா செய்தி தொடர்பாளர், சஞ்சய் ரவத் கூறியதாவது:ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின், 6வது சீசன், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி மே மாதம், 26ம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் மட்டும், எட்டு போட்டிகள் நடக்கவுள்ளன.
மகாராஷ்டிராவில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன.மாநிலத்தின் பல பகுதிகளில், குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் உதவ வேண்டும். போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, மகாராஷ்டிரா மக்களுக்காக, வறட்சி நிவாரண நிதியாக அளிக்க வேண்டும்.குறைந்தது, 500 கோடி ரூபாயாவது, வறட்சி நிவாரண நிதியாக அளிக்க வேண்டும்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், அறக்கட்டளை நோக்கத்துடன் நடத்தப்படுவது இல்லை; வர்த்தக நோக்கத்தில் நடத்தப்படுகின்றன.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான, சரத் பவார், மகாராஷ்டிரா முதல்வரும் காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, பிரித்விராஜ் சவான் ஆகியோர், இது தொடர்பாக ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்களிடம் வற்புறுத்த வேண்டும்.நிதி கொடுக்காத அணிகளை, மும்பையில் விளையாட அனுமதிக்க கூடாது.
மகாராஷ்டிரா அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால், சிவசேனா கட்சி, அந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.இவ்வாறு, சஞ்சய் ரவத் கூறினார்.மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரேயும், ""மகாராஷ்டிராவில் வறட்சியான சூழல் நிலவுவதால், அங்கு, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது,'' என, கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment