தோனி தான் சிறந்த கேப்டன்


இந்திய அணியை வழிநடத்த, மிகச் சரியான கேப்டன் தோனி தான்,'' என, முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண், 38. கடந்த 1996ல் ஆமதாபாத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், கடைசியாக கடந்த ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். இதுவரை 134 டெஸ்ட் (8781 ரன்கள், 17 சதம், 56 அரைசதம்), 86 ஒருநாள் (2338 ரன்கள், 6 சதம், 10 அரைசதம்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த லட்சுமண், திடீரென ஓய்வை அறிவித்தார். இதற்கு கேப்டன் தோனி தான் காரணம் என்று செய்திகள் வெளியாகின. தவிர, தனது வீட்டில் சக வீரர்களுக்கு லட்சுமண் கொடுத்த விருந்தில் தோனியை அழைக்காததும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற லட்சுமண் கூறியது: 

தோனி சிறந்த வீரர். இந்திய அணியை வழிநடத்தும் தகுதியும், திறமையும் இவரிடம் உள்ளது. கடந்த ஆண்டு, எனது வீட்டில் நடந்த "பார்ட்டி' குறித்து நாடு முழுவதும் பலதரப்பில் பேசப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும். அதன்பின் எனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஆஸ்திரேலிய பயணம் மிக மோசமாக அமைந்தது. அதன்பின், ஆறு மாதங்களாக ஓய்வு குறித்து ஆலோசித்து வந்தேன். 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் என்னால் விளையாடி இருக்க முடியும். ஆனால் இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில், திடீரென ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்து வரவுள்ள தென் ஆப்ரிக்க தொடருக்கு முன், இளம் வீரர்கள் குறைந்தபட்சம் 10 டெஸ்ட் போட்டியிலாவது பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். ஓய்வை அறிவித்த மறுநாள், எனது மனைவி, "மிகச் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள்', என்றார்.

இளம் வீரர்கள், டெஸ்ட் போட்டியில் விளையாட முன்வர வேண்டும். பணம் அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ஆனால் பணத்தை காட்டிலும் நாட்டிற்காக விளையாடுவது மேலானது. 

"டுவென்டி-20' போட்டியில் விளையாட தனி திறமை வேண்டும். குறைந்த பந்தில் அதிக ரன் எடுக்க, துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும்.
இவ்வாறு லட்சுமண் கூறினார்.

0 comments:

Post a Comment