14 ஆண்டுக்கு பின் சதம் அடிப்பாரா சச்சின்?


இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 14 ஆண்டுக்கு பின் பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் சதம் அடிப்பார் என, மொகாலி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள 3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இம்மைதானம் இந்திய வீரர் சச்சினுக்கு சோதனைக் களமாக உள்ளது.

சச்சின், 1999ல் இங்கு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முதன்முறையாக (126 அவுட் இல்லை) சதம் அடித்தார். அதன்பின் இங்கு 5 முறை (88, 55, 94, 88, 98) அரைசதத்தோடு வெளியேறினார். இதில் இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் அவுட்டானார். 

கடைசியாக 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடந்த டெஸ்டில் 98 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இவர், இதுவரை இங்கு விளையாடிய 10 டெஸ்டில் ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 709 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் ராகுல் டிராவிட் (735 ரன்கள்) உள்ளார்.

இம்மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டியிலும் சச்சின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர், இங்கு ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை. நான்கு முறை (99, 85, 67, 62) அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக 2007ல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கு விளையாடிய போட்டியில் 99 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

கடைசியாக 2011ல் இங்கு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில் 85 ரன்களுடன் வெளியேறினார். இவர், இதுவரை இங்கு விளையாடிய 7 ஒருநாள் போட்டியில் 366 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் அரங்கில், கடைசியாக செஞ்சுரியனில் 2011ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சதம் (146 ரன்கள்) அடித்தார் சச்சின். அதன்பின் 8 முறை (56, 91, 76, 94, 73, 80, 76, 81) அரைசதம் அடித்தார்.

தவிர இந்திய மண்ணில், கடைசியாக 2010ல் பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் (214 ரன்கள்) அடித்தார். 

அதன் பின் இந்தியாவில் விளையாடிய டெஸ்டில், 6 முறை (53, 61, 76, 94, 76, 81) அரைசதம் அடித்து அவுட்டானார். இம்முறை மொகாலி மைதானத்தில் சதம் அடித்து அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment