ஐதராபாத் டெஸ்ட்: புஜாரா, விஜய் சதத்தால் இந்தியா ரன் குவிப்பு


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. கேப்டன் கிளார்க் 91 ரன்னும், மேத்யூ வாடே 62 ரன்னும் எடுத்தனர். 

புவனேஸ்வர்குமார், ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், ஹர்பஜன் 2 விக்கெட்டும் எடுத்தனர். முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 4 ரன்னிலும், முரளிவிஜய் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

இன்று (ஞாயிற்றுக் கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் ஷேவாக் ஆட்டம் இழந்தார். அவர் 6 ரன்னில் பீட்டர் சிடிலின் பந்தில் மேத்யூ வாடேயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 17 ஆக இருந்தது. ஷேவாக் இந்த தொடரில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அவர் சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்சில் 2 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். 

2-வது விக்கெட்டுக்கு முரளிவிஜய்யுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரது  ஆட்டமும் மிகவும் மந்தமாக இருந்தது. அடித்து ஆடாமல் மிகவும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 28.5-வது ஓவரில் தான் இந்தியா 50 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து இருந்தது. 

முரளிவிஜய் 109 பந்தில் 29 ரன்களுடனும், புஜாரா 55 பந்தில் 15 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து பொறுமையுடன் ஆடினார்கள். முரளிவிஜய் அரை சதம் அடித்தார். இது அவருக்கு டெஸ்ட் அரங்கில் 3 வது அரை சதமாகும். 

அதைத்தொடர்ந்து புஜாராவும் 50 ரன்னை தொட்டார். இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடி ரன்னின் எண்ணிக்கையே உயர்த்தியது. புஜாரா நேர்த்தியாக ஆடி சதம் அடித்தார். எதிர் முனையில் விளையாடிய விஜய்யும் சதத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த ஜோடியை பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை. 

புஜாரா நேர்த்தியாக விளையாடி 150 ரன்னை தொட்டார். இறுதியில் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் சேர்த்தது. புஜாரா 162 ரன்களுடனும், விஜய் 129 ரன்களுடனும் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 74 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment