ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, அதிரடி "சீனியர்' துவக்க வீரர் சேவக் நீக்கப்பட்டார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது.
மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் ஏமாற்றி வந்த சேவக், 34, அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவர், கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்டில் சதம் அடித்தார். பின் சொந்த மண்ணில் விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
ஆஸ்திரேலியா சென்ற போது பங்கேற்ற நான்கு டெஸ்டின், 8 இன்னிங்சில் 198 ரன்கள் தான் எடுத்தார். இரு ஆண்டுகளில் ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின், நான்கு இன்னிங்சிலும் சேர்த்து 27 ரன்கள் தான் எடுத்தார்.
இருப்பினும், இந்திய அணி வெற்றி பெற்றதால், மீதமுள்ள போட்டிகளிலும் சேவக் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய திருப்பமாக சேவக் அணியில் இருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் தான் இவரது சக துவக்க வீரர் காம்பிர், மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
சேவக்கிற்குப் பதில் புதியதாக யாரும் சேர்க்கப்படவில்லை. அதாவது 15 பேர் அணி, 14 பேர் அணியாக குறைக்கப்பட்டது. இதனால், முரளி விஜயுடன் சேர்ந்து, மற்றொரு டில்லி வீரர் ஷிகர் தவான் துவக்கம் தரலாம்.
மற்றபடி அணியில் மாற்றம் இல்லை. இரட்டைசதம் அடித்த புஜாரா, விராத் கோஹ்லி அணியில் தொடர்வர். பவுலிங்கில் அஷ்வின், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா கூட்டணியில் மாற்றம் இல்லை. வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா அதிக விக்கெட் வீழ்த்தவில்லை எனினும், புவனேஷ்வருடன் சேர்ந்து நீடிக்கிறார்.
அணி விவரம்: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், சச்சின், புஜாரா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், ரகானே, பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் மற்றும் டிண்டா.
ஓய்வா... அப்படீன்னா...
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சேவக் கூறுகையில்,"" கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது. எனது திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடின முயற்சி செய்து மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்,'' என்றார்.
9 ஆண்டுக்குப் பின்...
2004ல் முதல் காம்பிர்-சேவக் இணைந்து, அணிக்கு துவக்கம் கொடுத்தனர். இவர்கள் இணைந்து விளையாடிய 87 இன்னிங்சில், 4412 ரன்கள் (சராசரி 52.52) எடுத்துள்ளனர். சிறந்த துவக்க ஜோடி வரிசையில் 5வது இடம் பெற்றது.
இருவரும் இப்போது நீக்கப்பட, 9 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக இவர்கள் இல்லாமல் முற்றிலும், புதிய ஜோடியுடன் இந்திய அணி மொகாலியில் களமிறங்குகிறது.
மீண்டு வருவார்
சேவக் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஹைடன் கூறுகையில்,"" சக வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கும் கேப்டன்களில் தோனியும் ஒருவர். சில நேரங்களில் கடின முடிவு எடுக்க வேண்டியதாகிறது. சேவக் இப்போது "பார்ம்' இல்லாமல் இருப்பது தற்காலிகமானது தான். இவர் மீண்டு வருவார். என்னைப் பொறுத்தவரை, சேவக் அணிக்கு திரும்பவில்லை என்றால் தான் ஆச்சரியம்,'' என்றார்.
கவாஸ்கர் ஆதரவு
சேவக் நீக்கப்பட்டது குறித்து, முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ""ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள மொகாலி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சேவக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
டெஸ்ட் அணியில் இருந்து சேவக்கை நீக்கியதால், இவரது கிரிக்கெட் வாழ்க்கை முற்று பெற்றதாக அர்த்தமில்லை. விரைவில் இழந்த "பார்மை' மீட்டு, டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என நம்புகிறேன். வரும் காலங்களில் இவரை "மிடில்-ஆர்டரில்' களமிறக்கலாம். இவரது அனுபவம், "மிடில்-ஆர்டரில்' நிச்சயம் கைகொடுக்கும்,'' என்றார்.
0 comments:
Post a Comment