2019 வரை தோனி தான் கேப்டன்


இந்திய அணியின் கேப்டனாக வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை தோனி நீடிக்க வேண்டும்,'' என, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து தோனியின், 31, மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்த்த இவர், இந்தியாவின் வெற்றிக் கேப்டனாக சாதனை படைத்தார். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பின் கிடைத்த ஒரு மாத இடைவெளியில், தன்னைத் தானே ஆய்வு செய்தார் தோனி. கேப்டனாக இவரது அணுகுமுறை மாறியது. அணியை மிகுந்த உறுதியுடன் வழிநடத்த துவங்கினார். திறமைக்கு ஏற்ப செயல்படாமல், கவனக்குறைவாக விளையாடும் வீரரிடம், தனது அதிருப்தியை உணர வைத்தார். 

பேட்டிங்கில் "சூப்பர் பார்மில்' உள்ளார். நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். இவரது தலைமைப்பண்பிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை கேப்டனாக நீடிக்க வேண்டும். 

அதுவரை கேப்டனை மாற்றுவது தொடர்பாக நாம் விவாதிக்க கூடாது. ஆனாலும், வயது காரணமாக 2019 வரை தோனி விளையாடுவாரா என தெரியவில்லை. இது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். 

இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்று கூறுவது கடினம். பட்டோடி, வடேகர், கங்குலி அல்லது டிராவிட் தான் சிறந்த கேப்டன் என வாதம் நடப்பது உண்டு. ஆனால், புள்ளி விவரங்களின் அடிப்படையில் தோனி தான் வெற்றிக் கேப்டன் என்று உறுதியாக கூறலாம்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார். 

0 comments:

Post a Comment