எனது வழியில் புஜாரா - டிராவிட் பெருமிதம்


டெஸ்ட் போட்டிகளில் புஜாரா, என்னைப் போல விளையாடுகிறார். தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான வீரராக வலம் வருவார்,'' என, டிராவிட் தெரிவித்தார்.

டெஸ்ட் அணியில் இருந்து டிராவிட் ஓய்வு பெற்ற பின், அவரது இடத்துக்கு வந்தவர் புஜாரா. இதுவரை 13 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், 1180 ரன்கள் எடுத்தார். 

இவரது சராசரி 65.55 ரன்கள். இதில் 4 சதம், 3 அரைசதங்கள் அடங்கும். இதுவரை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காத இவர், 61 உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில் 2735 ரன்கள் (8 சதம், 17 அரைசதம்) எடுத்துள்ளார் (சராசரி 56.97). புஜாரா.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:

டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக துவக்கியுள்ளார் புஜாரா. துவக்கத்தில் நான் விளையாடியதை விட அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பல்வேறு புதிய "ஷாட்டுகளை' அடித்து விளையாடும் இவர், டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் விதம், அப்படியே என்னைப் போலவே உள்ளது. 

இவர், தொடர்ந்து சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறார். அதேநேரம், ஒருநாள், "டுவென்டி-20' என, வித விதமான போட்டிகள், மாறுபட்ட ஆடுகளங்கள் என்று வரும் போது, பல்வேறு ஏற்ற இறக்கங்களை புஜாரா சந்திக்க வேண்டியது வரும். ஆனால், இப்போது போல உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தொடர்ந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் முத்திரை பதிக்கலாம்.


"பவுன்சர்' பயம்:

சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த போது, அன்னிய மண்ணில் "பவுன்சர்' பந்துகளை எதிர்கொள்வதில் மிகவும் சிரமப்பட்டேன். ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு முதன் முதலாக சென்ற போது, அங்குள்ள "டாப்-ஆர்டர்' வீரர்களை கவனித்தேன். அவர்கள் அளவுக்கு அதிகமான உயரத்தில் வரும் பந்துகளை அடிக்காமல் விட்டு விடுவதை கவனித்தேன். நானும் இதைப் பின்பற்றினேன். 

ஆனால், இந்திய வீரர்கள் இதை அடிக்க முற்படுவர். ஏனெனில், இங்குள்ள ஆடுகளங்களில் இப்படி வரும் பந்துகளை விட்டுவிட்டால், "ஸ்டம்சின்' மேல் பட்டு போல்டாகி விடும். இதற்கேற்ப, எந்த பந்தை அடிப்பது, எதை விடுவது என்பதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், இது மிகவும் கடினமானது. 

இப்போது புஜாராவுக்கு அன்னிய மண்ணில் அடுத்தடுத்து போட்டிகள் உள்ள நிலையில், சூழ்நிலைக்கு ஏற்படு மாற்றிக் கொண்டு கவனமாக செயல்பட வேண்டும். 


கடினமான "ஷாட்:

பீட்டர்சன், டேவிட் வார்னர் போன்றவர்கள், திடீரென அப்படியே மாறி நின்று, "சுவிட்ச் ஹிட்' முறையில் பந்தை அடிப்பர். இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், இதற்கு அசாத்திய திறமை வேண்டும். அதேநேரம், இதுபோல விளையாடும் பட்சத்தில் "வைடு' விதிகளில் மாற்றம் வந்து விடும். 


காப்பற்ற வழி:

டெஸ்ட் போட்டிகள் நீடித்து நிலைக்க வேண்டுமெனில், ஒவ்வொரு அணிகளும் அதிக டெஸ்டில் விளையாட வேண்டும். இப்போட்டியை காப்பாற்ற இதை விட்டால் வேறு வழியில்லை. அப்போது தான் டெஸ்ட் கிரிக்கெட் மேலும் முன்னேற்றம் அடையும். இப்படி ஒரு நிலையை பார்க்க ஆவலாக உள்ளேன். 

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment