ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடரில் அதிரடி மாற்றங்களை செய்து, கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
உள்ளூர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர், ஆண்டுதோரும் நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இதில் 27 அணிகள், "எலைட்' மற்றும் "பிளேட்' என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் "எலைட்' பிரிவில் 15 அணிகளும், "பிளேட்' பிரிவில் 12 அணிகளும் விளையாடும்.
இதில் மாற்றம் கொண்டுவர, கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி முடிவு செய்தது. இதற்காக நேற்று மும்பையில் இரண்டு மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, பி.சி.சி.ஐ., செயற்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தொழில்நுட்ப கமிட்டியில் பரிந்துரை செய்யப்பட்ட முடிவுகள்:
ரஞ்சி கோப்பை தொடரில், மொத்தமுள்ள 27 அணிகள் "ஏ', "பி', "சி' என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 9 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணிகளும், தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும்.
லீக் சுற்றின் முடிவில் "ஏ' மற்றும் "பி' பிரிவில் தலா முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள், "சி' பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதன்பின் அரையிறுதி, பைனல் நடக்கும்.
* முன்னதாக லீக் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் தலா நான்கு நாட்கள் நடக்கும். பைனல் மட்டும் ஐந்து நாட்கள் நடத்தப்படும். ஆனால் இனிவரும் காலங்களில் லீக் சுற்றுப் போட்டிகளை வழக்கம்போல நான்கு நாட்கள் நடத்தவும், "நாக்-அவுட்' சுற்றான காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல் தலா ஐந்து நாட்கள் நடத்த ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
* முன்னதாக, வெற்றி பெறும் அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும். "டிரா'வில் முடியும் பட்சத்தில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அணிக்கு 3 புள்ளி, மற்றொரு அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். இனி, "டிரா'வில் முடிந்தால், இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி பெறும் அணிக்கு வழக்கம்போல 6 புள்ளிகள் கிடைக்கும். தவிர, இன்னிங்ஸ் அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணிக்கு கூடுதலாக ஒரு "போனஸ்' புள்ளி வழங்கப்படும். மழை போன்ற இயற்கை நிகழ்வுகளால் போட்டி பாதிக்கப்படும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
* ரஞ்சி கோப்பை "நாக்-அவுட்' சுற்றின் போது, ஐந்து நாட்களில் போட்டி முடியாத பட்சத்தில், 6வது நாள் போட்டி நடத்தப்படும். 6வது நாளும் போட்டி முடியாத பட்சத்தில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்படும். ஒருவேளை இரு அணிகளின் முதல் இன்னிங்சும் 6 நாட்களில் முடியாத பட்சத்தில் "டாஸ்' முறையில் வெற்றி பெறும் அணி தேர்வு செய்யப்படும்.
* உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில், ஒரு ஓவரில் இரண்டு "பவுன்சர்' பந்துகள் வீச அனுமதி அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு பவுலர் 12 ஓவர் வீச அனுமதி அளிக்கப்படும்.
* முன்னதாக சால்வே சாலஞ்சர்ஸ் தொடரில், இந்தியா "ரெட்', "புளூ', "கிரீன்' என மூன்று அணிகள் பங்கேற்கும். இந்த மூன்று அணிகளை பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தேர்வு செய்யும். இனிமேல் இரண்டு அணிகளை மட்டும் தேர்வுக்குழு நியமிக்கும். மூன்றாவது அணியாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி விளையாடும்.
இதுதவிர துலீப் டிராபி, இரானி கோப்பை, தியோதர் டிராபி, சயீத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களிலும் சில மாற்றங்கள் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்ப கமிட்டி தலைவர் கங்குலி கூறுகையில், ""ரஞ்சி கோப்பை தொடரில் சில முக்கிய மாற்றங்களை செய்ய பரிந்துரை செய்துள்ளோம். இதன்மூலம், இனிவரும் தொடரில் ஒவ்வொரு அணிகளும் நிறைய போட்டிகளில் பங்கேற்கலாம். இது வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும். இதற்கான இறுதி முடிவை, செயற்குழு தான் முடிவு எடுக்கும்,'' என்றார்.
0 comments:
Post a Comment