உலகக் கோப்பையை வென்றபோதிலும் அர்ஜுனா விருது பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.
உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், கடந்த ஆண்டு அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆகியோர் அர்ஜுனா விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) யாருடைய பெயரையும் விருதுக்கு பரிந்துரைக்கவில்லை.
இதற்கான கடைசித் தேதியும் நிறைவடைந்துவிட்டது. மத்திய விளையாட்டு அமைச்சகத்துடனான மோதல் காரணமாகவே கிரிக்கெட் வீரர்கள் பெயரை பிசிசிஐ பரிந்துரைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பிசிசிஐயோ, அர்ஜுனா விருது தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. இதனால் இந்த முறை விருதை எதிர்பார்த்து காத்திருந்த தகுதியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
யுவராஜ் சிங்: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்ததோடு, தொடர்நாயகன் விருதையும் வென்றார் யுவராஜ் சிங். உலகக் கோப்பையில் 362 ரன்களைக் குவித்ததோடு, 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
விராட் கோலி: கடந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட்டில் அபார வளர்ச்சி கண்டவர் கோலி. உலகக் கோப்பையில் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச தொடர்களில் இக்கட்டான ஆட்டங்களில் அபாரமாக ஆடி வலுவான இலக்கையும் இந்தியா சேஸ் செய்வதற்கு முக்கிய பங்களித்தவர்.
தன்னுடைய அதிரடியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இதுவரை 85 ஆட்டங்களில் விளையாடி 11 சதங்களை அடித்துள்ளார்.
0 comments:
Post a Comment