இந்திய அணியின் அடுத்த கேப்டனை தேர்வு செய்வது எனது பணியல்ல. இந்த வாய்ப்பை அளித்தால், என்னையே தலைமை பதவிக்கு தேர்வு செய்வேன்,'' என, நகைச்சுவையாக கூறினார் தோனி.
தோனிக்கு, கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. தற்போது ஓய்வில் உள்ள இவர், காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் கேப்டன் பதவி குறித்து தோனி கூறியது:
எனது விருப்பத்தின் படி, இந்திய அணியின் அடுத்த கேப்டன் தேர்வு செய்யப்படமாட்டாது. ஒருவேளை எனது விருப்பத்தை கேட்டால், என்னையே தேர்வு செய்வேன். அணியை வழிநடத்த சேவக், காம்பிர், கோஹ்லி என திறமையான வீரர்கள் நிறைய பேர் அணியில் உள்ளனர்.
காஷ்மீர் இளைஞர்கள் கிரிக்கெட் மட்டுமல்லாமல், அனைத்து வகை விளையாட்டுகளிலும் தீவிரமாக பங்கேற்க வேண்டும். இதன் மூலம் இங்குள்ள நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். எல்லைப்பாதுகாப்பு வீரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
ரஞ்சி, துலீப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் ஜம்மு-காஷ்மிர் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். இவர்கள் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சிக்கு, பி.சி.சி.ஐ., சிறப்பாக செயல்படுகிறது. தங்களின் கீழ் உள்ள கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி உதவி வழங்குவதின்மூலம், வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில் தற்போது புதிய மைதானங்கள் உருவாகுவது மகிழ்ச்சியான விஷயம்.
இதன்மூலம் கிரிக்கெட் போட்டிகளை சிறிய நகரங்களில் உள்ள ரசிகர்களும் நேரடியாக காணலாம். விரைவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு தோனி கூறினார்.
எம்.பி.,யாக அசத்துவார் சச்சின்
ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் சச்சின் இன்று பதவி ஏற்கிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்த தோனி கூறுகையில்,"" கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்த சச்சின், இந்த புதிய பொறுப்பிலும் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்,''என்றார்.
0 comments:
Post a Comment