ஜெர்மனி உலக சாதனை! - அரையிறுதிக்கு முன்னேறியது

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் ஜெர்மனி அணி, கிரீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு சுலபமாக முன்னேறியது. தவிர, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 15வது வெற்றியை பெற்று உலக சாதனை படைத்தது.

கிரீஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து, உக்ரைனில் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதியில் ஜெர்மனி, கிரீஸ் அணிகள் மோதின.

ஜெர்மனி அணியில் கோமஸ், தாமஸ் முல்லர், பொடோல்ஸ்கி ஆகிய முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டு, போயட்டங், ஆன்ட்ரூ ஸ்சருள் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். கிரீஸ் அணியின் கேப்டன் கரகவுனிசிற்கு பதில் கிரிகோரிஸ் வாய்ப்பு பெற்றார்.

போட்டியின் துவக்கத்தில் ஜெர்மனி வீரர்கள் நிறைய கோல் வாய்ப்புகளை வீணாக்கினர். 4வது நிமிடத்தில் கெடிரா, கோல் அடித்தார். இது "ஆப் சைடு' கோல் என நடுவர் அறிவித்தார்.போயட்டங், மெசூர் ஆசில், குளோஸ் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டனர்.

போட்டியின் 39வது நிமிடத்தில் மெசூட் ஆசில் அடித்த பந்தை பெற்ற, ஜெர்மனி அணி கேப்டன் பிலிப் லாம், முதல் கோல் அடித்து எண்ணிக்கையை துவங்கி வைத்தார். முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது.


கோல் மழை:

இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற கிரீஸ் அணியின் ஜார்ஜியோஸ் சமராஸ், ஒரு கோல் அடித்து, ஸ்கோரை சமன் செய்தார். இதன் பின், ஜெர்மனி வீரர்கள், கிரீஸ் கோல் ஏரியாவில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். 61வது நிமிடத்தில் ஜெர்மனியின் கெடிரா ஒரு கோல் அடிக்க, 2-1 என முன்னிலை கிடைத்தது.

அடுத்த 7 வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு "பிரி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை மெசூட் ஆசில் அடிக்க, அதனை குளோஸ், அப்படியே தலையால் முட்டி கோலாக மாற்றினார். சர்வதேச அளவில் குளோஸ் அடித்த 64வது கோல் இது.


"சூப்பர்' முன்னிலை:

பின், 74வது நிமிடத்தில் மீண்டும் அசத்தினார் மெசூட் ஆசில். இம்முறை இவர் பந்தை குளோசிடம் அனுப்பினார். இவரிடம் இருந்து பந்தை பெற்ற மார்கோ ரியுஸ், கோலாக மாற்ற, ஜெர்மனி அணி 4-1 என, அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.

9வது நிமிடத்தில், ஜெர்மனி கோல் ஏரியாவில், பந்து போயட்டங் கையில் பட, கிரீஸ் அணிக்கு "பெனால்டி' வாய்ப்பு தரப்பட்டது. இதை சல்பிங்கிடிஸ் கோலாக மாற்றினார்.


உலக சாதனை:

முடிவில் ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து 15 போட்டிகளில் வென்ற அணி என, உலக சாதனை படைத்தது ஜெர்மனி. கடந்த 2010 உலக கோப்பை தொடரில் 3வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணி, உருகுவேயை வென்றது. இதில் இருந்து வெற்றிநடையை தொடர்கிறது. இதற்கு முன் ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் அணிகள் தொடர்ந்து 14 வெற்றி பெற்றுள்ளன.


கேப்டன் சபதம்

ஜெர்மனி அணி கேப்டன் பிலிப் லாம் கூறுகையில்,""கிரீசிற்கு எதிரான போட்டியில் நிறைய தவறுகள் செய்தோம். இதனால் தான் அவர்கள் 2 கோல் அடித்தனர். அரையிறுதியில் தவறு செய்ய மாட்டோம். முழுத்திறமை வெளிப்படுத்துவோம். எங்களை வீழ்த்துவது கடினம்,'' என்றார்.

0 comments:

Post a Comment