ஐ.பி.எல்., உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

ஐ.பி.எல்., தொடரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில், அணி உரிமையாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ராஜிவ் சுக்லா எச்சரித்துள்ளார்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் போது, மைதானத்தில் புகை பிடித்ததாக கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட. சூதாட்ட புகாரில் ஐந்து வீரர்கள் சிக்கினர்.

மும்பை மைதானத்தில் ஷாருக்கான் தகராறு, பாமர்ஸ்பச் மீது செக்ஸ் புகார், அடுத்து, பார்னல் மற்றும் ராகுல் சர்மா "போதை' பார்ட்டியில் பங்கேற்று சிக்கலில் சிக்கினர்.

கடைசியாக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் போலீசார் வெறியாட்டம் நடத்த, பல்வேறு தரப்பினர் ஐ.பி.எல்., போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கினர். இதையடுத்து இதன் தலைவர் ராஜிவ் சுக்லா, அணி உரிமையாளர்களை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

நாங்கள் எந்த வீரரையும் பாதுகாக்க மாட்டோம். யார் தவறு செய்தாலும், நடவடிக்கை நிச்சயம். இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படாதவாறு அணி உரிமையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். வீரர்கள், நிர்வாகிகள் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

முக்கிய லட்சியம்:

ஐ.பி.எல்., தொடரின் முக்கிய நோக்கமே கிரிக்கெட் போட்டியை வளர்ப்பது தான். இதற்கு தலைவராக பொறுப்பேற்றவுடன், இதில் எவ்வித பிரச்னைக்கும் இடம் தராமல் வைத்திருக்க வேண்டும் என்பது தான் முக்கிய லட்சியமாக வைத்துள்ளேன்.

ஐந்தாவது சீசனில் பல்வேறு பிரச்னைகள் வந்தன. இதனால், மக்கள் முதலில் தவறாக நினைக்கத் துவங்கினர். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இவைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், ரசிகர்கள் கொடுத்த ஆதரவு சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் இத்தொடர் வெற்றிகரமாக நடந்தது.

கடும் நடவடிக்கை:

வரும் நாட்களில் "ஸ்பாட்-பிக்சிங்' மற்றும் எவ்வித புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களை கேள்விப்பட்டால், காலம் தாழ்த்தாமல், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.பி.எல்., தொடரில் வீரர்கள் செய்யும் தவறுகளால், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது. இதனால், "மேட்ச் பிக்சிங்' போன்ற புகார்கள் வந்தால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல, வீரர்கள் "பார்ட்டிகளில்' பங்கேற்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. நாங்கள் எவ்வித "பார்ட்டியும்' நடத்துவதில்லை. உள்ளூர் வீரர்களை ஏலம் விடுவது குறித்து, கட்டுப்பாட்டுக் குழு முடிவு செய்யும்.

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

0 comments:

Post a Comment