ஒலிம்பிக்கிற்கு குட்பை - லியாண்டர் பயஸ் மிரட்டல்

ஜூனியர் வீரருடன் சேர்ந்து விளையாட முடியாது. தொடர்ந்து வற்புறுத்தினால், லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன்,'' என, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் மிரட்டியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் வீரர்கள் தேர்வு இடியாப்ப சிக்கலாக நீடிக்கிறது. லியாண்டர் பயசுடன் இணைந்து மகேஷ் பூபதி விளையாடுவார் என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்தது முதல் பிரச்னை துவங்கியது.

பயசுடன் விளையாட முடியாது என, பூபதி முதலில் அறிவித்தார், பூபதி இல்லையென்றால் ரோகன் போபண்ணாவுடன் விளையாட தயார் என பயஸ் தெரிவித்தார்.

ஆனால், போபண்ணாவும் தன் பங்கிற்கு மறுத்தார். இருவரும் முடியாது என்றதால், அடுத்து தரவரிசையில் 207வது இடத்திலுள்ள விஷ்ணு வர்தன், பயசுடன் ஜோடி சேரலாம் என தெரிவிக்க, இம்முறை பயஸ் கோபமடைந்து உள்ளார்.


விலகி விடுவேன்:

பயஸ், ஏ.ஐ.டி.ஏ.,க்கு எழுதிய கடிதம்:

லண்டன் ஒலிம்பிக்கில் பூபதி அல்லது போபண்ணாவுடன் தான் விளையாட முடியும். இவர்கள் இருவரும் நாட்டுக்காக என்னுடன் விளையாடவில்லை என்றால், மற்ற வீரர்களுடன் விளையாட வேண்டும் என்பது மகிழ்ச்சி தான். ஆனால், இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில், இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீரரான எனக்கு, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு ஏற்ப, ஜோடியை தேர்வு செய்ய உரிமை உண்டு. தரவரிசையில் பின்தங்கியுள்ள விஷ்ணு வர்தன், யூகி பாம்ப்ரி போன்ற ஜூனியர் வீரர்களுடன் விளையாட முடியாது.

வர்களுடன் தான் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தினால், லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இன்று முடிவு:

இதனிடையே, பயசுடன் சேர்ந்து விளையாடுமாறு, பூபதி மற்றும் போபண்ணாவுடன் தொடர்ந்து ஏ.ஐ.டி.ஏ., பேசி வருகிறது. இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இன்று ஒலிம்பிக் டென்னிஸ் வீரர்களை தேர்வு செய்ய கடைசி நாள் என்பதால், என்ன செய்வது என தெரியாமல், ஏ.ஐ.டி.ஏ., இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கிறது.

0 comments:

Post a Comment