ரஞ்சி கோப்பைக்கு முன்னர் உள்ளூர் போட்டிகளில் களமிறங்குகிறார் யுவராஜ் சிங்

புற்றுநோய் சிகிச்சை முடிந்து ஓய்வுபெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளார்.

அதற்கு முன்னதாக புச்சிபாபு கோப்பை, மொயின்உட் தவ்லா கோல்டு கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் யுவராஜ் பங்கேற்று விளையாடுகிறார்.

யுவராஜ் சிங்கின் உடல்நிலை குறித்து பேசிய அவரது நெருங்கிய நண்பர் ஒருவர், 'யுவராஜின் ஸ்கேன் அறிக்கையைப் பரிசோதித்த டாக்டர்கள், யுவராஜ் கிட்டத்தட்ட முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு, மாதம் ஒருமுறை அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதன்பின்னர் 5 மாதங்களுக்கு ஒருமுறை அவர் இத்தகைய சோதனைகள் செய்துகொண்டால் போதுமானது.

தற்போது அவர் சிறிது பலவீனமாகக் காணப்பட்டாலும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிறப்பாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்’ என்றார்.

யுவராஜ் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவது பற்றி பேசியபோது, ‘ரஞ்சி கோப்பைக்கு முன்னதாக புச்சிபாபு கோப்பை, மொயின்உட் தவ்லா கோல்டு கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் யுவராஜ் பங்கேற்று விளையாட உள்ளார். ரஞ்சிக் கோப்பை போட்டியில் அவர் நிச்சயம் களமிறங்குவார்’ என்றார் அவரது நண்பர்.

தற்போது எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையின்படி தான் நல்ல நிலையில் இருப்பதாகவும், சகவீரரான இஷாந்த் சர்மவுடன் ஆடிய 4 ஓவர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆட்டத்தில் தான் 7 சிக்சர்கள் அடித்ததாகவும் யுவராஜ் ட்விட்டர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment