தோனிக்கு டிராவிட் ஆதரவு

ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவியில் முத்திரை பதித்த தோனியால் டெஸ்டில் சாதிக்க இயலவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 8 டெஸ்டிலும் தோற்றதால் அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தோனி கழற்றி விடப்படுவார் என்று கூறப்படுகிறது.

டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்க தான் தயாராக இருப்பதாக காம்பீர் கூறி இருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவி தொடர்பாக தோனிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சென்னையில் நடந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிசன் போட்டியில் விஜய் கிளப் (இந்தியா சிமெண்ட்ஸ்) அணியில் ஆடினார்.

அப்போது டிராவிட் இது தொடர்பாக கூறியதாவது:-

கேப்டன் பதவியில் தோனி சிறப்பாக செயல்படுகிறார். அவரது தலைமையில்தான் இந்திய அணி டெஸ்டில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. உலக கோப்பையை வென்றது. வெற்றிக்கும், தோல்விக்கும் அணியின் செயல்பாடுதான் காரணம். டோனிக்கு இது மிகவும் சவாலான காலமாகும். ஆனால் தோல்வியில் இருந்து அவர் பல பாடங்களை கற்று வெற்றியை பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

டெஸ்ட் கேப்டனான அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர். டெஸ்டில் எனது இடத்தை நிரப்புவது யார் என்பதற்கு ஒருவரின் பெயரை மட்டும் கூற விரும்பவில்லை. அது நல்லதும் அல்ல. தற்போது உள்ள இளம் வீரர்கள் திறமையானவர்கள். இளம் வீரர்களில் 3 அல்லது 4 வீரர்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். அவர்களில் ஒருவர் எனது இடத்தை நிரப்பலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்டில் வெற்றி பெற்றதற்கு மிடில் ஆர்டர் வரிசை காரணமாகும். இதனால் மிடில் ஆர்டர் வரிசை மிகவும் சிறப்பானதாகும். 3-ம் நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) ஆடக்கூடிய திறமை தெண்டுல்கர், ஷேவாக், காம்பீரிடம் உள்ளது. இளம் வீரர்களுக்கு இவர்கள் வழிகாட்டி ஆவார்கள்.

இவ்வாறு டிராவிட் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment