லியாண்டர் பயஸ் ஜோடி யார்?

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாடுவது யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங் (தரவரிசை) இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். மற்ற இந்திய வீரர்களான மகேஷ் பூபதி (14வது இடம்), ரோகன் போபண்ணா (12வது) லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ், ஆண்கள் இரட்டையரில் பயசுடன் இணைந்து விளையாடப் போவது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக உள்ளது. பூபதி அல்லது போபண்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீபகாலமாக பயஸ், பூபதியுடன் இணைந்து விளையாடுவதில்லை. இந்த ஆண்டு முதல், புதிதாக ஜோடி சேர்ந்துள்ள பூபதி-போபண்ணா ஜோடி இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் பூபதி-போபண்ணா ஜோடியை அனுப்ப இயலாது.


சர்ச்சை "மெயில்':

சமீபத்தில் பூபதி-போபண்ணா இணைந்து, இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு "இ-மெயில்' மூலம் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் லண்டன் ஒலிம்பிக்கில் நாங்களே இணைந்து விளையாட விரும்புகிறோம். இல்லையென்றால், பயசுக்கு ஜோடியாக வேறு யாரையாவது தேர்வு செய்து கொள்ளுமாறு கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.


பூபதிக்கு வாய்ப்பு:

இந்திய வீராங்கனை சானியா மிர்சா, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட நேரடி வாய்ப்பை இழந்த நிலையில், தற்போது "வைல்டு கார்டு' அனுமதியை எதிர்நோக்கி உள்ளார். ஒருவேளை இவருக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையரில் விளையாடப் போவது யார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

சமீபத்தில் சானியா-பூபதி ஜோடி பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் பட்டம் வென்றது. ஏற்கனவே இந்த ஜோடி, ஆஸ்திரேலிய ஓபனிலும் பட்டம் வென்று சாதித்துள்ளது. இதனால் பயசுடன் இணைந்து பூபதியை அனுப்பும் பட்சத்தில், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடலாம்.


இன்று முடிவு:

இதனால் இந்திய டென்னிஸ் சங்கம் குழப்பத்தில் உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் இன்று இறுதி முடிவை எடுக்க உள்ளது.

இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ""லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு யாரை தேர்வு செய்வது என்பது எங்களுக்கு தெரியும். வீரர்கள், தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து, தேசத்திற்காக இணைந்து விளையாட முன்வர வேண்டும்,'' என்றார்.

0 comments:

Post a Comment