லண்டன் ஒலிம்பிக்: பூபதி திடீர் போர்க்கொடி

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் விளையாட லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி தேர்வு செய்யப்பட்டனர். போபண்ணாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற பூபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் கூட்டம்(ஏ.ஐ.டி.ஏ.,) நேற்று பெங்களூருவில் நடந்தது.

ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில், ஒரு நாட்டின் சார்பில் இரண்டு வெவ்வேறு ஜோடியை அனுப்பலாம். ஆனால், ஏ.ஐ.டி.ஏ., ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்ப முடிவு செய்தது. பயசுடன் பூபதி இணைந்து விளையாடுவார் என அறிவித்தது. இது பூபதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், போபண்ணாவுடன் இணைந்து விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தார்.

பயஸ்-பூபதியை பொறுத்தவரை ஏற்கனவே நான்கு முறை (1996, 2000, 04, 08) ஒலிம்பிக் போட்டியில் விளையாடியுள்ளனர். இதல் ஒரு முறை கூட பைனலுக்கு முன்னேறவில்லை. அதிகபட்சமாக 2004ல் அரையிறுதி வரை சென்றது. தற்போது, இவர்களை மீண்டும் தேர்வு செய்திருப்பது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தேசம் முக்கியம்:

இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் அனில் கண்ணா கூறியது: லண்டன் ஒலிம்பிக்கில் பயசின் ஜோடியாக பூபதியை தேர்வு செய்துள்ளோம். ஏற்கனவே இவர்கள் நான்கு முறை ஒலிம்பிக் போட்டியில் விளையாடி இருப்பதால், போதிய அனுபம் பெற்றிருப்பார்கள். இவர்கள், தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து, தேசத்துக்காக இணைந்து விளையாடுவார்கள் என நம்புகிறோம்.

தவிர சமீபகாலமாக பூபதியின் "பார்ம்' சிறப்பாக இருப்பதால், பயசுக்கு சரியான ஜோடியாக தீர்மானித்தோம். இவர்களது பயிற்சிக்காக இந்திய அரசு மாதம் ரூ. 3.50 லட்சம் வரை செலவு செய்கிறது. இதனால் இவர்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது.

லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இரண்டு இந்திய ஜோடிக்கு அனுமதி இருந்த போதிலும், ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்ப உள்ளோம். இது தகுதியான வீரர்கள் இல்லாததையே சுட்டிக்காட்டுகிறது. இது, இந்திய டென்னிசுக்கு ஏமாற்றமான விஷயம்.

சானியாவுக்கு "வைல்டு கார்டு' அனுமதி கிடைத்த பின்பு தான், கலப்பு இரட்டையரில் விளையாடும் வீரர் குறித்து முடிவு செய்யப்படும். பயஸ், பூபதி ஜோடி லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பதால், இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இவ்வாறு அனில் கண்ணா கூறினார்.ஒலிம்பிக் போட்டிக்கு முன்னரே இப்படி மோதிக் கொண்டால்


"முதுகில் குத்தியவர்'

பூபதி கூறுகையில், ""பயசுடன் இணைந்து மீண்டும் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பது ஏமாற்றமான முடிவு. ஏற்கனவே நான்கு முறை விளையாடி உள்ளோம். இதில் ஒரு முறை கூட பதக்கம் கிடைக்கவில்லை. கடந்த "சீசனில்' திடீரென பிரிந்து, எனது முதுகில் குத்தினார். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை. எங்களுக்குள் நட்பு இல்லை.

இந்நிலையில் மீண்டும் எங்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவது சரியான முடிவு அல்ல. தற்போது நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். இதில் ஒருவரை, பயசின் ஜோடியாக தேர்வு செய்திருக்கலாம். இரண்டு ஜோடிக்கு வாய்ப்பு இருந்தும், ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்புவது ஏமாற்றம் அளிக்கிறது,'' என்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னரே இவர்கள் இப்படி மோதிக் கொண்டால், பதக்கம் எப்படி கிடைக்கும் என்று டென்னிஸ் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

1 comments:

  1. வணக்கம் நண்பரே!

    உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் சுலபமாக இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

    தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

    ReplyDelete