டென்னிஸ் சர்ச்சை: தீர்வு எப்போது?

லண்டன் ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் பங்கேற்பாரா, இல்லையா என்பது, வரும் 28ம் தேதிக்கு மேல் தான் உறுதியாக தெரியும்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சர்வதேச தரவரிசையில் 7வது இடத்திலுள்ள பயஸ், நேரடியாக தகுதி பெற்றார்.

இவருடன் விளையாட மகேஷ் பூபதி, போபண்ணா இருவரும் மறுத்த நிலையில், வேறு வழியின்றி "ஜூனியர்' வீரர் விஷணு வர்தன் (207வது "ரேங்க்') விளையாடுவார் என்றும், கலப்பு இரட்டையரில் பயஸ்-சானியா ஜோடி பங்கேற்கும் எனவும் இந்திய டென்னிஸ் சங்கம்(ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்தது.

பயஸ், இதை ஏற்றுக்கொண்டாரா, இல்லையா என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை.

இவரை சமாதானப்படுத்த ஏ.ஐ.டி.ஏ., தேர்வுக்குழுவின் "சீனியர்' ரோகித் ராஜ்பால், லண்டன் சென்றும், சமாதானம் ஏற்பட்டதாக தெரியவில்லை.


காரணம் என்ன:

வரும் 28ம் தேதி சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,), லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சிறப்பு அனுமதி ("வைல்டு கார்டு') பெற்றவர்கள் பெயரை வெளியிடுகிறது. இதில் சானியா மிர்சா பெயர் இருந்து, அவர் பயசுடன் விளையாடுவது உறுதி என்றால் தான், லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்பார். இல்லையென்றால், பயஸ் விலகி விடலாம்.


சானியா மறுப்பு:

ஏனெனில், பூபதி-சானியா ஜோடி கலப்பு இரட்டையரில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளது. இதனால், பயசை ஏற்க சானியா மறுக்க அதிக வாய்ப்புள்ளது. தவிர, பயஸ், சானியா இருவரும் முன்கள வீரர்கள்.

இவர்கள் இணைந்து விளையாடிய 2010 காமன்வெல்த் போட்டி காலிறுதியில் சாதாரண அறிமுகமற்ற ஜோடியிடம் தோற்றது. இதனால், பின்கள வீரரான பூபதியுடன் சேர்ந்தால் தான் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என, சானியா நம்புகிறார்.

இதனால், இப்பிரச்னையில் வரும் 28ம் தேதிக்குப் பின் தான், உறுதியாக முடிவு தெரியும் என்று நம்பப்படுகிறது.

0 comments:

Post a Comment