கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தல்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக போர்ச்சுகல் முன்னேறியது. கேப்டன் கிறிஸ்டியனோ ரொனால்டோவின் அசத்தல் கோல், வெற்றிக்கு கைகொடுத்தது. செக் குடியரசு அணி பரிதாபமாக வெளியேறியது.

போலந்து மற்றும் உக்ரைனில் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் லீக் சுற்று முடிந்து தற்போது காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. வார்சா நகரில் நடந்த முதல் காலிறுதியில் போர்ச்சுகல், செக் குடியரசு அணிகள் மோதின.

போட்டி துவங்கியது முதல் இரு அணிகளும், கோல் அடிப்பதை விட தற்காப்பு ஆட்டத்தில் தான் அதிக கவனம் செலுத்தின. 26 மற்றும் 27 வது நிமிடங்களில் போர்ச்சுகல் வீரர்கள் நானி, மெய்ர்லஸ் இருவரும் "மஞ்சள் கார்டு' பெற்றனர்.


முதல்பாதி சமன்:

32வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அந்தரத்தில் தலை கீழாக பறந்து கோல் அடிக்க முயற்சித்தார். இதை செக் குடியரசு கீப்பர் பீட்டர் செக், அருமையாக தடுத்தார். முதல் பாதியின் "ஸ்டாப்பேஜ்' நேரத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்து, கோல் "போஸ்ட்டில்' பட்டு திரும்ப, கோல் வாய்ப்பு நழுவியது.


"ஆப் சைடு' கோல்:

இரண்டாவது பாதி முழுவதும் போர்ச்சுகல் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். . 58வது நிமிடத்தில் நானியிடம் இருந்து பெற்ற பந்தை அல்மெய்டா, கோலாக மாற்றினார். ஆனால், இது "ஆப் சைடு' கோல் என, நடுவர் அறிவிக்க போர்ச்சுகல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.


முன்னிலை பெற்றது:

மவுட்டினோ, நானி ஆகியோர் எடுத்த கோல் முயற்சிகளும் வீணாகின. பின் 79 வது நிமிடத்தில் மவுட்டினோவிடம் இருந்து பெற்ற பந்தை, அப்படியே தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதையடுத்து போர்ச்சுகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது.


முதல் அணி:

இதை சமன் செய்து விட வேண்டும் என்று செக் குடியரசு அணியினர் எடுத்த எந்த முடிவும் பலன் தரவில்லை. முடிவில், போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2012 யூரோ தொடரில் முதல் அணியாக, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வரும் 27ம் தேதி நடக்கும் அரையிறுதியில் ஸ்பெயின் அல்லது பிரான்ஸ் அணியை சந்திக்கும்.


பைனல் தான் இலக்கு

போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில், ""யூரோ கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. செக்குடியரசு அணிக்கு எதிரான காலிறுதியில் முதல் 20 நிமிடங்கள் மோசமாக விளையாடினோம். பின், சுதாரித்து எழுச்சி கண்டதால் வெற்றி பெற முடிந்தது.

அணியில் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், அரையிறுதியில் விளையாடும் தகுதி எங்களுக்கு உள்ளது. பைனலுக்கு முன்னேறுவதுதான் முதல் இலக்கு. அரையிறுதிப் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறப் போராடுவோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment