கிரிக்கெட்: இந்தியா "ஏ' அணி ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணியின் அபார பந்துவீச்சில் இந்தியா "ஏ' அணி முதல் இன்னிங்சில் 230 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா "ஏ', வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி நான்கு நாள் போட்டி செயின்ட் லூசியாவில் நடக்கிறது. "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பெர்மால், "பீல்டிங்' தேர்வு செய்தார்.


"டாப்-ஆர்டர்' ஏமாற்றம்:

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபினவ் முகுந்த் (10) மோசமான துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா (12) ஏமாற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அஜின்கியா ரகானே (32), கேப்டன் புஜாரா (33), மனோஜ் திவாரி (32) பெரிய அளவில் சோபிக்கவில்லை.


சாக்சேனா அரைசதம்:

"மிடில்-ஆர்டரில்' ராபின் பிஸ்ட் (5), விரிதிமன் சகா (27) கைகொடுக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ஜலாஜ் சாக்சேனா அரைசதம் அடித்தார். இத்தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இவர், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எளிதாக சமாளித்து கவுரவமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். இவர், 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அக்ஷய் தரேகர் (0), பர்விந்தர் அவானா (0) ஏமாற்ற, முதல் இன்னிங்சில் இந்திய அணி 230 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோனாதன் கார்டர், தேவேந்திர பிஷூ தலா 3,
ஜான்சன், மெக்கிளின், வீராசாமி பெர்மால் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


நல்ல துவக்கம்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட், பாவல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் (13), பாவல் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment