சென்னை சூப்பர்கிங்ஸ் ஹாட்ரிக் சாதனை படைக்குமா?

5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. இதில் 9 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை 'லீக்' சுற்றில் மோதின.கடந்த 20-ந்தேதியுடன் 'லீக்' ஆட்டம் முடிவடைந்தன.

புள்ளிகள் அடிப்படையில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

பெங்களூர் ராயல் சேல்ஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 9-வது இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேறின.

பிளேஆப் சுற்று கடந்த 22-ந்தேதி தொடங்கியது. 'குவாலிபையர்-1'க்கான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 ரன்னில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

எலிமினேசன் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் 38 ரன்னில் மும்பை இந்தியன்சை தோற்கடித்து 'குவாலிபையர்-2' போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை அணி வெளியேறியது.

சென்னையில் நேற்று நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் சென்னை அணி 86 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ்-காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 'ஹாட்ரிக்' சாதனை படைக்குமா? என்று சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை அணி 2010 மற்றும் 2011-ம் ஆண்டில் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல சென்னை சூப்பர்கிங்சுக்கு நல்லவாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி பெங்களூர் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதே மாதிரி தற்போதும் சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று சூப்பர்கிங்ஸ் சரித்திரம் படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

கடந்த 2 போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இதே அதிரடியான ஆட்டம் நாளையும் தொடர்ந்தால் கோப்பை நமக்கு தான். இந்தப் போட்டித் தொடரிலேயே மிகவும் மோசமாக ஆடிவந்த சென்னை வீரர் முரளிவிஜய் மிகவும் முக்கியமான நேற்றைய ஆட்டத்தில் முத்திரை பதித்தார். அவரது அதிரடியான ஆட்டம் சென்னை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் முரளி விஜய் 52 பந்தில் 95 ரன் எடுத்தார். இதனால் அதே அதிரடியான ஆட்டத்தை நாளைய இறுதிப்போட்டியில் வெளிப்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோல பிராவோ, கேப்டன் டோனி ஆகியோரும் தொடர்ந்து அதிரடியாக ஆடுவது சென்னை அணிக்கு பலமே. ரெய்னா, அல்பி மார்கல், மைக்ஹஸ்சி, பத்ரி நாத் போன்ற சிறந்த பேட்ஸ் மேன்களும் சென்னை அணியில் உள்ளனர்.பந்து வீச்சில் ஹில்பெனாஸ், அஸ்வின் ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

சென்னை அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. 2008-ம் ஆண்டு ராஜஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது. கொல்கத்தா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்திலும் அந்த அணி உள்ளது.பேட்டிங், பவுலிங்கில் அந்த அணி சமபலம் பெற்று காணப்படுகிறது.

கேப்டன் காம்பீர், காலிஸ், மேக்குல்லம், யூசுப்பதான், மனோஜ் திவாரி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். வெஸ்ட்இண்டீசை சுழற் பந்து வீரர் சுனில்நரின் அந்த அணியின் தூணாக உள்ளார். அவர் 24 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இது தவிர பெர்ட்லீ, சகீப் அல் ஹசன், எல்.பாலாஜி, ரஜத் பாட்டியா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் 'லீக்' ஆட்டத்தில் 2 முறை மோதியதில் சென்னையில் கொல்கத்தா அணியும், கொல்கத்தாவில் சென்னை அணியும் வெற்றி பெற்றது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment