கபில் தேவுக்கு தகுதியில்லையா?

முன்னாள் வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பி.சி.சி.ஐ., பட்டியலில், கபில் தேவ் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல்., மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ. 70 கோடியை, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, 2003-04க்கு முன் ஓய்வு பெற்ற, 160 வீரர்களுக்கு பிரித்துக் கொடுக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்தது.

இதன் படி 100 டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக பங்கேற்றிருந்தால் ரூ. 1.5 கோடி, 75 முதல் 99 டெஸ்ட் என்றால் ரூ. 1 கோடி, 50 முதல் 74 டெஸ்டிற்கு ரூ. 75 லட்சம் என, பிரித்து வழங்கப்படுகிறது. இத்தொகை பெறும், 65 வீரர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியானது.

இதில் 125 டெஸ்டில் பங்கேற்ற கவாஸ்கர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், 131 டெஸ்டில் விளையாடிய கபில் தேவ் இடம்பெறவில்லை. 1983ல் இந்திய அணிக்கு உலக கோப்பை வென்று தந்த கேப்டன் கபில் தேவை பி.சி.சி.ஐ., புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன் மூலம் இவருக்கு ரூ. 1.5 கோடி கிடைக்காமல் போகிறது.


காரணம் என்ன:

2007ல் பி.சி.சி.ஐ., யை எதிர்த்து, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) என்ற அமைப்பை கபில் தேவ் ஏற்படுத்தினார். இதன் பேரில் "டுவென்டி-20' போட்டிகளை நடத்தினார். இதனால் கபில் தேவ், பி.சி.சி.ஐ., இடையே மோதல் ஏற்பட்டது. இத்தொடரில் பங்கேற்ற வீரர்களை பி.சி.சி.ஐ., தடை செய்தது.

பின் பொது மன்னிப்பு வழங்கியதால், அம்பதி ராயுடு, பின்னி போன்றவர்கள் ஐ.பி.எல்., தொடருக்கு வந்தனர். மும்பை பயங்கரவாத தாக்குதல் காரணமாக, 2009ல் தொடர் பாதியில் கை விடப்பட்டது. இருப்பினும், தற்போதைய பட்டியலில் கபில் தேவ் இடம் பெறாதது, பி.சி.சி.ஐ., இன்னும் இவரை மன்னிக்கவில்லை என்பதை காட்டுகிறது.

0 comments:

Post a Comment