அதிக நம்பிக்கையே தோல்விக்கு காரணம்

ஐ.பி.எல். கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் தவறவிட்டனர். அதிக நம்பிக்கையே சென்னை அணியின் தோல்விக்கு காரணம்.

பிளேஆப் சுற்று வாய்ப்பை சென்னை அணி அதிர்ஷ்டவசமாக பெற்றது. 3 நிலைகள் (ராஜஸ்தான் அணி டெக்கானிடம் தோல்வி, டெல்லியிடம் பஞ்சாப் தோல்வி, பெங்களூர் அணி டெக்கானிடம் தோல்வி) சென்னைக்கு சாதகமாக அமைந்ததால் வாய்ப்பு கிடைத்தது.

எலிமினேசனில் சென்னை அணி 187 ரன் குவித்து மும்பையையும், “குவாலி பையர்-2” போட்டியில் 222 ரன் குவித்து டெல்லியையும் வீழ்த்தி சூப்பர்கிங்ஸ் 4-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மும்பை, டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி விட்டதால் கொல்கத்தாவையும் வென்று விடலாம் என்று சென்னை அணி வீரர்கள் அதிகமான நம்பிக்கையில் இருந்தனர். சென்னை அணியின் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும்போது 200 ரன்னை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி சில ஓவர்களில் அதிகமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாததால் 190 ரன்னுடன் ஆட்டம் முடிந்தது. இந்த ரன் போதுமானதுதான் என்று டோனி தோல்விக்கு பிறகு கூறினார்.

இந்த ரன்னுக்குள் கொல்கத்தாவை மடக்கி விடலாம் என்று சென்னை வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் பிஸ்லா - காலிஸ் ஜோடி அதிரடியாக ஆடி சென்னை அணியின் ஹாட்ரிக் கனவை தகர்த்தது.

சென்னை அணி வீரர்கள் இன்னும் கொஞ்சம் உஷாராக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். அதிகமான நம்பிக்கையால் நல்ல வாய்ப்பை இழந்து விட்டது. ஆனால் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி அதற்கு தகுதியானதே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

0 comments:

Post a Comment