ஐ.பி.எல்., பைனலில் சூதாட்டமா?

ஐ.பி.எல்., பைனலில் கிரிக்கெட் சூதாட்டம் அமோகமாக நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை அணியின் "ஹாட்ரிக்' வாய்ப்பு பறிபோனதாக ரசிகர்கள் புலம்புகின்றனர்.

சென்னையில் நேற்று முன் தினம் நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

இத்தொடரில் சென்னை அணியை பைனலுக்கு எப்படியாவது தகுதி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் காய் நகர்த்தப்பட்டது. லீக் சுற்றில் தடுமாறிய நிலையில், பெங்களூரு அணி தோற்று, "பிளே-ஆப்' சுற்றுக்கு வழிவிட்டது.

அடுத்து ஐ.பி.எல்., அதிகாரப்பூர்வ இணையதளத்தில் "எலிமினேட்டர்' போட்டிக்கு முன்பாகவே சென்னை அணி, மும்பை மற்றும் டில்லியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியதாக செய்தி வெளியிடப்பட்டது. பின் ஒரு தனியார் "மொபைல்' நிறுவனம், டில்லிக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் சென்னை அணி பைனலுக்கு தகுதி பெற்று விட்டதாக கூறியது.

முக்கியமான பைனலில், கோல்கட்டாவின் சுனில் நரைன், கேப்டன் காம்பிர் ஆகியோரை சமாளித்து விட்டால், சென்னைக்கு தான் வாய்ப்பு என்று கூறப்பட்டது. இதற்கேற்ப நரைன் "சுழலை' தவிடுபொடியாக்கிய சென்னை பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்த்தனர். பின் ஹில்பெனாஸ் வீசிய முதல் ஓவரில் காம்பிர் 2 ரன்களுக்கு போல்டாக, இனி கோல்கட்டா அவ்வளவு தான் என்ற நிலைமை ஏற்பட்டது.

இந்த நேரத்தில் சென்னை அணிக்கு தான் வாய்ப்பு என்று நிறைய பேர் "பெட்' கட்டியிருப்பர். ஆனால், கோல்கட்டா அணியின் பிஸ்லா அதிரடியாக பேட் செய்து, போட்டியின் முடிவை மாற்ற, கிரிக்கெட் சூதாட்ட புக்கிகளுக்கு கொள்ளை லாபம் கிடைத்திருக்கும்.

பிஸ்லாவை வெளியேற்ற சென்னை கேப்டன் தோனி சரியான வியூகங்களை வகுக்கவில்லை. இதுவரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இவர், இத்தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆனால், பைனலில் 89 ரன்கள் விளாசியது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. காலிஸ் கொடுத்த "கேட்ச்சை' எல்லைக் கோட்டு அருகே மைக்கேல் ஹசி நழுவவிட்டது இன்னொரு அதிர்ச்சி.

கடைசி 2 ஓவரில் கோல்கட்டா வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. முக்கியமான 19வது ஓவரை வீசிய ஹில்பெனாஸ் தேவையில்லாமல் "நோ-பால்' வீசினார். பேட்ஸ்மேன் இடுப்பு பகுதிக்கு மேலே லேசாக சென்ற பந்துக்கு அம்பயர் பில்லி பவுடனும் அவசரப்பட்டு "நோ-பால்' கொடுத்தார்.

இதனை பயன்படுத்திய கோல்கட்டா அணி 3 ரன் எடுத்தது. மீண்டும் வீசப்பட்ட இந்த பந்தில் சாகிப் ஒரு பவுண்டரி அடிக்க, நிலைமை தலைகீழாக மாறியது.

பீல்டிங், பவுலிங்கும் மோசமாக அமைய, போட்டியில் சூதாட்டம் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு ஏற்பட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "பெட்டிங், பெட்டிங்' என கோஷம் எழுப்பியதை கேட்க முடிந்தது.

தங்களது திறமையான ஆட்டத்தால் புகழின் உச்சியை தொட்ட சென்னை அணியினர், பைனலில் ஏமாற்றியதால் பல்வேறு விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு, அடுத்த முறை கோப்பை வென்று பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

0 comments:

Post a Comment