ஒரு நபர் விசாரணை என்ற பெயரில் சூதாட்ட புகாரை பி.சி.சி.ஐ., மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால், அணி உரிமையாளர்கள், மற்ற வீரர்கள் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல இந்தியா "டிவி' சேனல், நடத்திய புலனாய்வு செய்தியில், இந்திய உள்ளூர் கிரிக்கெட், ஐ.பி.எல்., தொடரில் நடக்கும் சூதாட்டம், கறுப்பு பண நடமாட்டம் குறித்து தெளிவாக தெரியவந்தது.
"ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஸ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய 5 இந்திய வீரர்கள் 15 நாள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் ரவி சவானி இதுகுறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டார்.
இவர் இந்த ஐந்து வீரர்களின் செயல்பாடு குறித்துதான் அறிக்கை தரவுள்ளார். ஆனால், புலனாய்வு செய்தியில் அணி நிர்வாகிகள், உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டு கேப்டன் ஒருவர் மற்றும் இந்திய அணியின் முக்கிய வீரர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பி.சி.சி.ஐ.,யின் கண்துடைப்பான விசாரணையால், இவர்கள் எல்லாம் தப்பிக்க வழி ஏற்பட்டுள்ளது.
இதனால், விசாரணை வளையத்தை இந்த ஐந்து பேருடன் முடித்துக் கொள்ளாமல், பெரியளவில் நடத்தினால், முழு உண்மை தெரியவரும்.
தனியாரிடம் தரலாம்:
ஒரு வேளை பி.சி.சி.ஐ., விசாரணை குழு அமைத்தால், இதில் இடம் பெறுபவர்களுக்கு, எப்படியும் நிர்வாகிகளுடன் தொடர்பு இல்லாமல் இருக்காது. அணி நிர்வாகிகளை விசாரிக்க வேண்டிய நிலையில், சென்னை கிங்ஸ் உரிமையாளர் சீனிவாசனும் விசாரிக்கப்படலாம். கடைசி அறிக்கையை பி.சி.சி.ஐ., தலைவராக உள்ள சீனிவாசனிடம் தான் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையை தவிர்க்க, சுதந்திரமாக செயல்படும் தனியார் அமைப்பிடம் விசாரணையை ஒப்படைக்கலாம். ஏனெனில், 2000ல் ஏற்பட்ட சூதாட்ட புகாரை பி.சி.சி.ஐ., குழு சரியாக விசாரிக்கவில்லை. பின் சி.பி.ஐ., முழு உண்மையையும் வெளிக்கொண்டு வந்தது.
முழு விசாரணை:
டெக்கான் அணியின் சுதிந்திரா, முதல் தர போட்டியில் வேண்டுமென்றே "நோ-பால்' வீசியுள்ளார். கடந்த ஆண்டு பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி "பிக்சிங்' செய்யப்பட்டது என அமித் யாதவ் கூறினார். கறுப்பு பணம் தரப்படுவது குறித்து மோனிஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
தவிர, இந்தியா "டிவி' யை சேர்ந்தவர்கள் ஏஜன்ட் என்று சொல்லித் தான் வீரர்களிடம் பேசியுள்ளனர். அப்படியெனில், எந்த ஏஜன்ட்டும் வீரர்களை எளிதாக அணுகும் வகையில் உள்ளனர்.
முழு விசாரணை நடத்தும் பட்சத்தில், வீரர்கள்-ஏஜன்ட் தொடர்பு, ஏஜன்ட்-உரிமையாளர்கள் தொடர்பு குறித்து தெரியவரும்.
நிரந்தர தீர்வு வேண்டும்: மேகன்
மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறுகையில்,"" சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) பி.சி.சி.ஐ., அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனால் சூதாட்ட விசாரணையை நடத்தும் அதிகாரம், முழுப்பொறுப்பும் பி.சி.சி.ஐ.,க்கு உள்ளது. இது அவர்களின் வேலை. அதேநேரம், 5 வீரர்கள் "சஸ்பெண்ட்' மட்டும் போதாது. இதன் பின்னணி குறித்து விசாரித்து, நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.
தனியாக ஏலம் நடத்தலாம்
சூதாட்ட புகார் குறித்து ஐ.பி.எல்., அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" சர்வதேச போட்டியில் விளையாடிய சென்னை வீரர் சகாவுக்கு, ஏலத்தில் ரூ. 54 லட்சம் கிடைத்தது. ஆனால், மும்பை அணியின் அம்பதி ராயுடுக்கு ரூ. 30 லட்சம் மட்டும் தான். ஆனால், இவரது "டுவென்டி-20' திறமை, சகாவுடன் ஒப்பிடவே முடியாது.
இதனால், உள்ளூர் வீரர்களுக்கு, குறிப்பிட்ட தொகையை நிர்ணயிப்பதை தவிர்த்துவிட்டு, இந்த வீரர்களுக்கு தனியாக, வெளிப்படையான முறையில் பி.சி.சி.ஐ., ஏலம் நடத்த முன்வர வேண்டும்,'' என்றார்.
கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க சதி
"சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பஞ்சாப் வீரர் ஸ்ரீவாஸ்தவ் கூறுகையில்,"" முழங்கால் காயம் காரணமாக 2011, 2012 சீசனில் உ.பி., அணிக்காக பங்கேற்கவே இல்லை. இதே காரணத்துக்காக ஐ.பி.எல்., தொடரில் விளையாடவில்லை.
ஏன், பஞ்சாப் அணியின் முதல் 15 வீரர்கள் பட்டியலில் கூட இல்லை. கடந்த ஒரு மாதமாக லக்னோவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் நான் எப்படி, "நோ-பால்' வீச முடியும். இது என் கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க நடக்கும் சதி,'' என்றார்.
0 comments:
Post a Comment