கோல்கட்டாவுக்கு கோப்பை கங்குலி கணிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், காம்பிர் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் கோப்பை வென்று சாதிக்கும்,'' என, புனே வாரியர்ஸ் அணி கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. "பிளே-ஆப்' சுற்றின் முதல் போட்டியில் கோல்கட்டா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தி, முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது.

இதுகுறித்து முன்னாள் கோல்கட்டா அணி கேப்டன் கங்குலி கூறியது: எனது ஆறாவது அறிவு கூறியபடி கோல்கட்டா அணிக்கு இம்முறை ஐ.பி.எல்., கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கோப்பை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் கோல்கட்டா அணிக்கு உள்ளது.

கிரிக்கெட் என்பது ஒரு வட்டம். இம்முறை ஒரு அணி கோப்பை வெல்லும், அடுத்த முறை வேறு ஒரு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இம்முறை கடைசி இடம் பிடித்த புனே வாரியர்ஸ் அணி, அடுத்த தொடரில் கோப்பை வெல்லலாம்.

கோல்கட்டா அணியில் சுனில் நரைன் இருப்பது சாதகமான விஷயம். கோல்கட்டா அணியின் வெற்றிக்கு நரைனின் பங்களிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கலாம். இக்கட்டான நேரத்தில் பந்துவீசும் இவர், எதிரணி பேட்ஸ்மேன்களின் மனநிலைக்கேற்ப பந்துவீசி நெருக்கடி கொடுக்கிறார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து காம்பிர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஐ.பி.எல்., தொடர் மூலம் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments:

Post a Comment