ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே-ஆப்' சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டம் "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேடி வந்தது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பெங்களூரு அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கானிடம் வீழ்ந்து பரிதாபமாக வெளியேறியது.
ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான 71வது லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
"டாப்-ஆர்டர்' ஏமாற்றம்:
டெக்கான் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜாகிர் கான் வேகத்தில் ஷிகர் தவான் (5) போல்டானார். வினய் குமார் பந்தில் அக்ஷாத் ரெட்டி (7) அவுட்டானார். அடுத்து வந்த கேமிரான் ஒயிட் (1) ஏமாற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் சங்ககரா (15), முரளிதரன் சுழலில் சிக்கினார். இதனால் டெக்கான் அணி 11.1 ஓவரில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
டுமினி அதிரடி:
விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய டுமினி, துவக்கத்தில் ஒன்று இரண்டாக ரன் சேர்த்தார். பின் அதிரடிக்கு மாறிய இவர், ஜாகிர் கான் பந்தில் ஒரு சிக்சர் அடித்து அரைசதம் அடித்தார். முரளிதரன் பந்தில் மூன்று சிக்சர் விளாசிய டுமினி (74) நம்பிக்கை தந்தார். பார்த்திவ் படேல் (16) சோபிக்கவில்லை.
ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆஷிஸ் ரெட்டி (4) அவுட்டாக, டெக்கான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் வினய் குமார் 3, ஜாகிர் கான் 2, பரமேஸ்வரன், முரளிதரன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கெய்ல் அதிர்ச்சி:
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல் அதிரடி துவக்கம் கொடுத்தார். கோனி வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு சிக்சர், மூன்று பவுண்டரி அடித்த கெய்ல் (27), ஸ்டைன் வேகத்தில் துரதிர்ஷ்டவசமாக போல்டானார். தில்ஷன் (4) ஏமாற்றினார்.
தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, 5.3வது ஓவரில் சவுரப் திவாரி "ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். அமித் மிஸ்ரா சுழலில் டிவிலியர்ஸ் (4), மயாங்க் அகர்வால் (1) வெளியேற, மீண்டும் களமிறங்கினார் திவாரி.
கோஹ்லி ஆறுதல்:
பின் இணைந்த கோஹ்லி, திவாரி ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. அமித் மிஸ்ரா, ஆஷிஸ் ரெட்டி பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய கோஹ்லி (42), முக்கியமான நேரத்தில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த ஜாகிர் கான் (0), ஸ்டைன் வேகத்தில் "கிளீன்' போல்டானார். தனிநபராக போராடிய திவாரி (30) நிலைக்கவில்லை.
பெங்களூரு அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. வினய் குமார் (7), முரளிதரன் (0) ஏமாற்ற, பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. டெக்கான் சார்பில் ஸ்டைன், ஆஷிஸ் ரெட்டி தலா 3, அமித் மிஸ்ரா 2, பிரதாப் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஸ்டைன் பெற்றார்.டெக்கான்-பெங்களூரு ரிசல்ட்
சென்னை நுழைந்தது எப்படி
"நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டியில் 8 வெற்றி, 7 தோல்வி உட்பட 17 புள்ளிகள் பெற்றிருந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. சென்னை அணி "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற மற்ற போட்டிகளின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தது.
அதிர்ஷ்டம் கைகொடுக்க ராஜஸ்தான் (எதிர்-டெக்கான்), பஞ்சாப் (எதிர்-டில்லி), பெங்களூரு (எதிர்-டெக்கான்) அணிகள் தோல்வி அடைந்தன. சென்னை (+0.100), பெங்களூரு (-0.022) அணிகள் தலா 17 புள்ளிகள் பெற்றிருந்த போதிலும், "ரன்-ரேட்' அடிப்படையில் சென்னை அணி "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
"வில்லன்' டெக்கான்
ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு வில்லனாக மாறியது சங்ககரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி. கடைசி நேரத்தில் எழுச்சி கண்ட டெக்கான் அணி, முக்கியமான போட்டிகளில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளை வீழ்த்தி, அந்த அணிகளின் "பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை தட்டிப்பறித்தது. தவிர புள்ளிப்பட்டியலில், கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியை கடைசி இடத்துக்கு தள்ளி, எட்டாவது இடம் பிடித்தது.
கெய்ல் முதலிடம்
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இவர், 15 போட்டியில் ஒரு சதம், 7 அரைசதம் உட்பட 733 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து டெக்கான் அணியின் ஷிகர் தவான் (569 ரன்), ராஜஸ்தான் அணியின் ரகானே (560) ஆகியோர் உள்ளனர்.
டெக்கான் மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாததால், கெய்லின் முதலிடத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஒருவேளை கோல்கட்டா கேப்டன் காம்பிர் (556), டில்லி கேப்டன் சேவக் (484) அடுத்து வரும் சுற்றில் சதம் அடித்தால் கூட கெய்ல் ரன்னை பிடிக்க முடியாது.
0 comments:
Post a Comment