கிரிக்கெட்டா...அரசியலா: மனம் திறக்கிறார் சச்சின்

அரசியலில் குதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. விளையாட்டு வீரராகவே நீடிப்பேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கிரிக்கெட்டில் அரங்கில் 100 சதம் உட்பட எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். இதற்கு அங்கீகாரமாக ராஜய்சபா எம்.பி., பதவிக்கு, ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டார்.

இவருக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளம், பார்லிமென்ட் நடக்கும் நாட்களில் ரூ. 2 ஆயிரம் தினப்படி, டில்லியில் சொகுசு பங்களா, இலவர ரயில், விமான பயணம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் கிடைக்க உள்ளன. இதையடுத்து இவர் முழுநேர அரசியலில் குதிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து புனேயில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற சச்சின் பேசியது:

நான் அரசியல்வாதி கிடையாது. விளையாட்டு வீரராகவே தொடருவேன். கிரிக்கெட்டை கைவிட்டு அரசியலில் குதிக்கப் போவதில்லை. கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவேன்.

22 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவைக்கு அங்கீகாரமாக தான் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஜனாதிபதி என்னை தேர்வு செய்திருக்கிறார் என நம்புகிறேன். இதற்கு முன் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் பிரித்விராஜ் கபூர் போன்றோர், அவர்கள் சார்ந்த துறையில் செய்த சேவைக்காக எம்.பி., பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.


உலக கோப்பை தருணம்:

என்னைப் பொறுத்தவரை 100வது சதத்தை காட்டிலும் உலக கோப்பை வென்ற தருணத்தையே சிறந்ததாக கருதுகிறேன். கடந்த 2003ல் பயிற்சியாளர் ஜான் ரைட், 100வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவேன் என கணித்தார். இந்தக் கனவு நனவானது. அதே நேரத்தில் உலக கோப்பைக்காக சுமார் 22 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது.

2011ல் உலக கோப்பையை இந்தியா வென்ற போது, மும்பை மைதானத்துக்கு வெளியே எனது கார் மீது ஏறி நின்று ரசிகர்கள் ஆட்டம் போடுவதாக, டிரைவர் புகார் கூறினார். அவர்களை தடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினேன். எனது காருக்கு ஏற்படும் சேதத்தை பற்றி கவலைப்பட வில்லை.

ஏனென்றால் உலக கோப்பை வெற்றி, நாட்டை ஒருங்கிணைத்தது. அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடினர். அது தான் எனது வாழக்கையின் மிகச் சிறந்த நாளாக அமைந்தது.

ஒருவர் "பேட்' செய்யும் போது நிகழ்காலத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தை பற்றி நினைக்கக் கூடாது. மனதை தெளிவாக வைத்துக் கொண்டால், நெருக்கடி இல்லாமல் விளையாடலாம்.


கடவுள் உதவி:

கிரிக்கெட் மீதான எனது மோகம் அப்படியே உள்ளது. அது தான் எனது வாழ்க்கை. எனக்காக ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும். அவர்களது ஆதரவு எனக்கு தேவையான பலத்தை அளிக்கும். ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. சரியான முடிவுகளை எடுக்க, எனக்கு வழிகாட்டும்படி கடவுளை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

0 comments:

Post a Comment